நலம் தரும் நல்லெண்ணெய்

உடல் நலத்தில் இந்தியர்கள் காட்டும் அக்கறை காரணமாக புதிது, புதிதாக சமையல் எண்ணெய் வகைகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆனால் எள்ளில் இருந்து தயாரிக்கப்படும் நல்லெண்ணெய், மற்ற சமையல் எண்ணெய்களுக்கு சிறிதும் குறைந்தது அல்ல. பெயருக்கு ஏற்றார் போல் ’நல்ல’ மருத்துவ குணங்களை கொண்டது தான் நல்லெண்ணெய்.

நல்லெண்ணெயில் இருக்கக்கூடிய சீசமோல் என்ற மூலக்கூறு இதய தசைகளுக்கு வலு அளிப்பது மட்டுமல்லாமல், ரத்தக்குழாய்களில் கெட்ட கொழுப்பு படியாமல் தடுக்கிறது.

சமீபகாலமாக நல்லெண்ணைக்கு பதிலாக பலரும் ரீபைண்ட் ஆயில் பயன்படுத்த தொடங்கியதால், எள் பயிரிடப்படும் நிலப்பரப்பு குறைந்ததுள்ளது.

நல்லெண்ணையில் இருக்கும் மருத்துவ குறிப்பு

இதய ஆரோக்கியம்

நல்லெண்ணெயில் சீசேமோல் (sesamol) என்னும் வேதி பொருள் உள்ளதால்  இதை உணவில் அதிகம் சேர்க்கும் போது, அது இதயத்திற்கு சரியான பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கும்.

வலுவான எலும்புகள் நல்லெண்ணெயில் ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருப்பதை உறுதி செய்யும். எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமென்றால் நல்லெண்ணெயையும் சாப்பிடுவது நல்லது.

மனநிலை மேம்படும்

நல்லெண்ணெய் மன அழுத்தத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது. இது இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற செய்து கடுமையான சோர்வில் இருந்து விடுபடச் செய்து, உடலில் இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும்.

நீரிழிவு

நல்லெண்ணெயில் உள்ள அதிகப்படியான மக்னீசியமானது – இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருட்களை எதிர்த்து போராடும் இதனால் நீரிழிவு நோய் வருவது தடுக்கலாம்.

சுத்தமான பற்கள்

தினமும் காலையில் எழுந்து நல்லெண்ணெயால் வாயை கொப்பளித்தால் (Oil Pulling), பற்களில் தங்கியிருக்கும் சொத்தைகள் நீங்குவதோடு, பற்கள் நன்கு பளிச்சென்று இருப்பதோடு ஆரோக்கியமாகவும் இருக்கும்.

உடலுக்கு குளிர்ச்சி

உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது, நல்லெண்ணெயை சிறிது குடிப்பது போன்றவை செய்தால், உடல் வெப்பம் தணிந்து, உடல் குளிர்ச்சி அடையும்.

கண்கள் ஆரோக்கியம்

நல்லெண்ணைய் தேய்த்துக் குளித்து வந்தால், உடல் உஷ்ணம், கண் வலி, கண்ணில் நீர் வடிதல், மண்டைக் குத்தல் போன்றவை குணமாகும். கம்ப்யூட்டர் முன்பு நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால், கண்கள் சிவப்பாகி, அதன் ஆரோக்கியம் கெடும். எனவே வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் கண்களின் ஆரோக்கியம் மேம்படும்.

தூக்கமின்மை

தூக்கமின்மையால் அவஸ்தைப்படுபவர்கள், வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால், தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபட்டு, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

 

 – கோமதிதேவி.பா