வலிப்பு நோய் திருமணத்திற்கு தடையில்லை! – டாக்டர் ராஜேஷ் சங்கர் ஐயர

நரம்பியல் மற்றும் வலிப்பு நோய் நிபுணர், கே.எம்.சி.ஹெச்

மூளை மற்றும் நரம்பு செல்களில் தகவல் பரிமாற்றம் செய்வதற்கு செல்களுக்கிடையில் இயல்பாகவே சிறிய அளவில் மின்சாரம் உற்பத்தியாகிறது. ஏதாவது ஒரு காரணத்தால் மூளையில் உண்டாகிற அதீத அழுத்தத்தால் இந்த மின்சாரம் அதிகமாக உருவாகி, அது நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்குக் கடத்தப்படுகிறது. அப்போது உறுப்புகளின் இயக்கம் மாறுபட்டு கை, கால்கள் உதறத் தொடங்குகின்றன. இது ‘வலிப்பு’ எனப்படுகிறது.

பிறந்த குழந்தை முதல் முதியவர் என எல்லா வயதினரையும் இந்த நோய் பாதிக்கிறது. மூளை நரம்பியல் செயல்பாடுகளில் நிகழும் திடீர் மாற்றங்களினாலேயே வலிப்பு ஏற்படுகிறது.   இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஒவ்வோரு ஆண்டும் நவம்பர் 17 ஆம் தேதி தேசிய வலிப்பு நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது.

வலிப்பு நோய் குறித்த முக்கிய தகவல்களை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் நரம்பியல் மற்றும் வலிப்பு நோய் நிபுணர் டாக்டர் ராஜேஷ் சங்கர் ஐயர் பகிர்ந்து கொண்டதாவது:

சமூகத்திலும் குடும்பத்திலும் பிரச்சினை:

வலிப்பு நோய் குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கும். பாதிக்கப்பட்ட குழந்தை ஹைப்பர் ஆக்ட்டிவிட்டியாக இருப்பதால் அவர்களை கட்டுப்படுத்தவே முடியாது. கற்றல் குறைபாடும் இருக்கும். இந்நோய் இருக்கும் பெண்களுக்கு திருமணம் நடப்பதில் சிக்கலும், திருமணம் நடந்தாலும் விவாகரத்து போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். அதேசமயம் ஆண்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல் உண்டாகும்.

எந்த வயதில் இந்த நோய் ஏற்பட்டாலும் சமூகம் மற்றும் குடும்பம் சார்ந்த பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். ஏன் என்றால் ஒரு தடவையுடன் வலிப்பு ஏற்பட்டு நின்றுவிடுவதில்லை. இது மீண்டும் மீண்டும் ஏற்படும் ஒன்றாக உள்ளது.

வலிப்பு மாத்திரையும், தவறான புரிதலும்:

வலிப்பு நோய்க்கான மாத்திரைகளை சாப்பிடுவதில் பொதுமக்களுக்கு நிறைய குழப்பங்கள் உள்ளன. வாழ்க்கை முழுவதும் சாப்பிட்டால் உடலில் பக்க விளைவுகள் ஏற்படும் என நினைத்து உட்கொள்ள தயங்குகின்றனர்.

வலிப்பு நோய் உள்ள 30 – 40 % மக்களுக்கு வாழ்க்கை முழுவதும் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டிய வாய்ப்புகளும், 60 – 70 % மக்களுக்கு குறிப்பிட்ட காலம் மட்டுமே மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை இருக்கும்.

சிலர் தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டால் சிறுநீரகம் பாதிக்கப்படும் என நினைக்கின்றனர். வலி நிவாரணி மாத்திரைகள் தான் சிறுநீரகத்தை பாதிக்கும். அதனால் வலிப்பு நோய்க்கான மாத்திரைகளை உட்கொள்வதில் பயம் தேவையில்லை.

இதில் பக்க விளைவுகள் மிகவும் அரிதாகவே இருக்கும். நூறில் மூன்று பேருக்கு சிறிய அளவிலான பக்க விளைவுகள் ஏற்படும். மயக்கம் வருதல், தூக்கம், வேலையில் கவனம் இல்லாமல் இருப்பது, எடை குறைதல், நடுக்கம் போன்றவை ஏற்படுமே தவிர, வலிப்பு மாத்திரையால் உடல் உறுப்பு பாதிப்படையாது. உடலில் இதுபோன்ற தொந்தரவுகள் ஏற்படும் போது, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அதற்கு பதிலாக மாற்று மாத்திரையை சாப்பிட்டால் பக்க விளைவுகள் சரியாகிவிடும்.

மாத்திரையிலேயே வலிப்பு சரியாகிவிடும் என்ற நிலையில் இருக்கும் நோயாளிகள் அதனைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வதில்லை. மருத்துவர் கூறும் காலகட்டம் முழுவதும் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது அவசியம்.

இயல்பான வாழ்க்கையை வாழலாம்!

தனக்கு ஏன் வலிப்பு ஏற்பட்டது என சிலர் வருந்துவார்கள். இது மன சோர்வையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். இந்த நோய் ஏற்பட்டதால் தாழ்வு மனப்பான்மையுடன், யாருடனும் சேராமல், எதிலும் கலந்து கொள்ளாமல் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளக் கூடாது.

மாத்திரைகளை தவறாமல் உட்கொண்டாலே அனைவரை போலவும், இயல்பான வாழ்க்கையை வாழ முடியும். வலிப்பு நோய் உள்ள பெண்கள் திருமணத்திற்கு முன்பு சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் சில பரிசோதனைகளை கூடுதலாக செய்ய வேண்டியிருக்கும்.

பெண்களுக்கு இந்நோயினால் திருமணத்தில் தடை ஏற்படுவது முக்கியப் பிரச்சனையாக உள்ளது. திருமணத்திற்கும், குழந்தை பெற்றேடுப்பதற்கும் வலிப்பு நோய் ஒரு தடையில்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

நவீன சிகிச்சையால் மேம்படும் வாழ்க்கை:

அறிவியல் மற்றும் விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் வலிப்பு நோய்க்கான நவீன பரிசோதனைகளும், சிகிச்சைகளும் வந்துவிட்டன. வலிப்பு நோய்க்குரிய எம்.ஆர்.ஐ ஸ்கேன் (epilepsy protocol MRI) பரிசோதனை செய்யும் போது மூளையில் இருக்கும் பிரச்சனைகளை துல்லியமாக கண்டறிய முடியும்.

வீடியோ இ.இ.ஜி என்ற பரிசோதனை, மருந்தினால் கட்டுப்படுத்த முடியாத வலிப்பு நோயாளிகளுக்கான வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இதன் மூலம் மூளையின் எந்த பகுதியில் இருந்து வலிப்பு ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து, சரியான சிகிச்சையை வழங்க முடியும்.

Functional magnetic resonance imaging (fMRI), ஸ்பெக்ட் (SPECT) ஸ்கேன் போன்ற சில மேம்படுத்தப்பட்ட பரிசோதனை மூலம் இன்னும் துல்லியமாக பிரச்சனையை கண்டறிய முடியும். இவை அனைத்தும் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மருந்தினால் வலிப்பு நோயை சரிசெய்ய முடியாத நிலையில், அறுவை சிசிச்சை (Epilepsy surgery) செய்ய வாய்ப்பு உள்ளதா என்பதை காணவேண்டும். அனைவருக்கும் அறுவை சிசிச்சை செய்யும் வாய்ப்பு கிடைக்காது. மாத்திரையால் கட்டுப்படுத்த முடியாத 30 சதவீதம் பேரில் 10 % பேருக்கு தான் அறுவை சிசிச்சை செய்வதற்கான வாய்ப்பு இருக்கும். இதன் மூலம் ஒரு நிரந்தர தீர்வையும் பெறமுடியும்.

மீண்டும் மீண்டும் வலிப்பு ஏற்படுகிறது என்ற நிலை உள்ளவர்களுக்கு மேற்கூறிய பரிசோதனைகள் தேவை. இதன் மூலம் நோயாளிக்கு என்ன மாதிரியான சிகிச்சையை வழங்கலாம் என்பதை தீர்மானிக்கலாம். இதனால் அவர்களின் வாழ்க்கையின் தரம் மேம்படுகிறது.