கார்ப்பரேட் நிறுவனங்களின் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள்

இந்தியாவில் கார்ப்பரேட் துறையானது நாட்டின் தேசிய வருமானத்தில் நான்கில் மூன்று பங்கை கொண்டுள்ளது. புதிய தொழில்களைத் தொடங்குதல், வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், ஏற்றுமதியை உயர்த்துதல், மக்களின் வாழ்க்கைத்தர உயர்வு, திறன்கள் மற்றும் சமூக மேம்பாடு ஆகியவற்றின் மூலம் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதில் நிறுமங்கள் முக்கிய பங்காற்றுகிறது என்கிறார் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை பேராசிரியர் தேவராஜன்.

மேலும், அவர் கூறியதாவது: இந்தியா போன்ற வளரும் நாடுகள் இப்போது பொருளாதார வளர்ச்சியில் மேலாதிக்கம் பெற கார்ப்பரேட் முறைகளை அறிமுகப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்துகின்றன. அத்தகைய கனவை நனவாக்க, இந்தியா அரசாங்கம் எளிதான நிறும பதிவு முறை, காப்புரிமைகள், துணிகர மூலதனம், வரி விலக்கு, கடன், ஏழு புதிய ஆராய்ச்சி பூங்காக்கள், சுய சான்றளிப்பு போன்றவற்றை உருவாக்கியுள்ளது. அரசாங்கத்தின் பல்வேறு சலுகைகள் மற்றும் உதவிகள் இருந்த போதிலும், வணிக நிறுமங்கள் நீண்ட கால சவால்களை எதிர்கொள்கின்றன.

அவை முறையே நிறும விதிமுறைகள், செயலக மேலாண்மை, ஒப்பந்தங்களை உருவாக்குதல் மற்றும் செயல்படுத்துதல், ஏற்றுமதி நடைமுறைகள், தணிக்கை, கணக்கியல், வரிவிதிப்பு, நிதி ஓட்ட மேலாண்மை, வணிக நிர்வாகத்தில் பகுப்பாய்வு திறன்கள், எப்பொழுது அதிகாரம் மற்றும் வேலையை பகிர்ந்தளிப்பது என தீர்மானிப்பது, எப்பொழுது வணிகத்தில் முழுமையாக ஈடுபடுவது அல்லது வெளியேறுவது என முடிவு செய்வது, சந்தையில் உடனடி போக்குகளின் வேகத்தை தக்க வைத்துக்கொள்வது, போட்டிக்கு பதிலளிப்பது, தொழில்நுட்பம், பணியாளர்களை பணியமர்த்துதல், மற்றும் மூலதனச்சந்தை ஆபத்து. இது போன்ற சவால்கள், நிறுமங்களை தனது வணிக உத்தியை செயல்படுத்தி இலக்குகளை அடைவதை தடுக்கிறது. இதனை கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இளங்கலை பட்டப்படிப்பு பி.காம் கார்ப்பரேட் செகிரேட்டரிஷிப் (B.Com Corporate Secretaryship).

நிறுமச்செயலாண்மை பட்டப்படிப்பின் சிறப்பம்சங்கள்

ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் கார்ப்பரேட் துறை, பணியமர்த்தும் தன்னுடைய நிர்வாகிகளிடமும், அலுவலர்களிடமும் எதிர்பார்க்கும் திறமைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு பல்கலைகழகங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பி.காம் கார்ப்பரேட் செகிரேட்டரிஷிப் (B.Com Corporate Secretaryship). அதுமட்டுமின்றி காலத்திட்கேற்ப அவ்வப்போது பாடத்திட்டத்தை புதுப்பித்து, நடைமுறை பயிற்சியுடன் பட்டப்படிப்பை வழங்குகிறது.

இந்த பட்டப்படிப்பின் மூலம் மாணவர்கள் நிறுமச்சட்ட நுணுக்கங்கள், செயலக மேலாண்மை, வரிச்சட்டம், நிதியியல், அடக்க விலை மற்றும் மேலாண்மைக் கணக்கியல், வங்கி செயல்பாடு, காப்பீடு முறை, மூலதனச் சந்தை நடைமுறை, பங்கு பத்திரங்கள் சட்டம், தொழிலாளர் சட்டம், நிதி மற்றும் கடன் ஆய்வாளர், சட்டத்துக்கு இணங்க நிறுமத்தை வழிநடத்துதல், சந்தைப்படுத்தல் மேலாண்மை, மனிதவள மேலாண்மை, பொருளாதாரம், கார்ப்பரேட் வணிக கடிதம், தணிக்கை, செபி கட்டுப்பாடு (SEBI), வணிக நேர்மை, காப்புரிமை பதிவு மற்றும் செயல்படுத்துதல் முறை போன்ற அறிவை பெறுகின்றனர்.

வேலை வாய்ப்புக்கள்

நிறுமச்செயலாண்மை படிப்பை முடித்த மாணவர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அனைத்து திறமையையும் வளர்த்துக் கொள்ள முடிகிறது, இதன் மூலம் அவர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களில் முக்கிய நிர்வாக பதவிகளான உதவி நிறுவன செயலாளர், அசோசியேட் ஜெனரல் ஆலோசகர், எக்ஸிகியூட்டிவ் ஸ்ட்ராடஜிக் மேனேஜர், கார்ப்பரேட் பிளானர், சட்ட செயலாளர், கார்ப்பரேட் கவர்னன்ஸ் அசோசியேட், தலைமை நிர்வாக அதிகாரி போன்ற உயர் பொறுப்புகளில் பணியமர்த்தப்படுகின்றனர். அது மட்டுமின்றி இடைநிலை மேலாண்மை பொறுப்புகளான நிதி மற்றும் செயல்முறை ஆய்வாளர், வரி ஆய்வாளர், மனிதவள வணிக கூட்டாளர், மூத்த கணக்கு நிர்வாகி, உதவி இயக்க மேலாளர், பொது பேரேடு கணக்காளர், கார்ப்பரேட் முதலீட்டு மேலாளர் பதவிகளிலும் நியமிக்கப்படுகிறார்கள்.

சுயதொழில் வாய்ப்புகள்

நிறுமச்செயலாண்மை பாடநெறியானது சுயதொழில் வாய்ப்புகளையும் வழங்குகிறது. ஒரு தொழில் முனைவராக அவர்கள் எண்ணற்ற பணிகளை செய்ய முடியும் அவைகளாவன புதிய நிறுமங்களை பதிவு செய்தல், நிறுமங்களுக்கான திட்டப்பணி வரைவு, நிதி ஆதாரங்களை உருவாக்குதல், கூட்டு முயற்சி வணிக பரிந்துரை, கார்ப்பரேட் சட்ட ஆலோசனை சேவைகள், வரி திட்டமிடல் மற்றும் மேலாண்மை, ஏற்றுமதி இறக்குமதி மற்றும் அந்நிய செலாவணி பரிவர்த்தனைகள், பெருநிறுவன அறிவுசார் சொத்து நிர்வாகம், பங்குச்சந்தை ஆய்வாளராக பங்கு பரிமாற்றம் செய்தல். கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் படிப்பின் காரணமாக வேலை வாய்ப்புகள் வானளாவ உயர்ந்துள்ளன இதன் மூலம் மாணவர்கள் கார்ப்பரேட் உலகில் ஆதிக்கம் செலுத்துவதற்கான அங்கீகாரத்தை பெறுகிறார்கள்.

முதுகலை மற்றும் தொழில்முறை படிப்புகளுக்கான வாய்ப்புக்கள்

இளங்கலை படிப்பை முடித்த மாணவர்கள் முதுகலை படிப்புகலான M. Com (CS), M. Com, M. Com (IB), M. Com (CA), MBA, MSW, MA and MCA. என அனைத்து பாடத்திட்டத்திலும் சேர தகுதியுடையவர்கள்.
மேலும் தொழில்முறை படிப்புகளான Company Secretary Course (CS), Charted Accountants Course (CA), Cost Management Accountant Course (CMA), BL and LLB (Bachelor in laws) அவற்றிலும் சேர்ந்து படிக்க தகுதியுடையவர்கள்.