மேதர் வீதி

சாலை கூறும் சரித்திரம்

– சி.ஆர்.இளங்கோவன், வரலாற்று ஆய்வாளர்.

கோயம்புத்தூர் நகரத்தின் விரிவாக்கமாக உருவான ஆர். எஸ். புரத்தின் வீதியின் பெயர்கள் பெரும்பாலும் கோவை நகர பிரமுகர்களின் பெயர்களைத் தாங்கியே அமைந்துள்ளன. கோயம்புத்தூரின் முதல் நகராட்சித் தலைவராக இருந்த அன்றைய கலெக்டர் பெயரில் அமைந்த மெக்ரிகர் வீதிக்கும், பூமார்க்கெட் வீதிக்கும் இடையில் அமைந்துள்ள பகுதி முன்பு மேதர் வீதி என்றழைக்கப்பட்டது.

யார் இந்த மேதர்?

மைசூர் பகுதியில் இருந்து கொங்கு நாட்டில் குடியமர்ந்த பலர் கோயம்புத்தூர் நகரத்திலும் குடியமர்ந்துள்ளனர். அவர்களில் பல விதமான தொழில் செய்யும் பல சமூகத்தினரும் அடங்குவர்.அவர்களில் ஒரு பிரிவினர் தான் மேதர் எனப்படும் சமூகத்தினர் ஆவர். இவர்கள் கன்னடத்தைத¢ தாய் மொழியாக கொண்டவர்கள். இவர்களின் வாழ் வாதாரம் என்பது மூங்கிலைப் பயன்படுத்தி பொருட்களைச்செய்து வருவதாகும். அக்கால கட்டத்தில் விவசாயம், வணிகம், மற்றும் வீட்டு உபயோகத்துக்கான பலவகையான கூடைகள், சுவர் போல மறைப்பாக பயன்படும் தட்டிகள், மூங்கிலால் ஆன தொங்கு திரைகள், ஏணிகள் என்று பல பொருட்களை செய்து வந்தனர். சொல்லப் போனால், மரணச்சடங்கின் போது பயன்படும் பாடை கட்ட உதவும் மூங்கில் கூட இவர்களிடம் தான் நகர மக்கள் வாங்குவர்.

இவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே பழைய கோவை நகரத்தில் குடியமர்ந்தவர்கள். ஆர், எஸ்.புரம்  எனும் புதிய விரிவாக்கப்பகுதி உருவான போது இவர்களுக்கும் ஒரு பகுதிஅங்கு ஒதுக்கித் தரப்பட்டது. அந்தவகையில் இங்கு குடியமர்ந்தவர்கள் வீடுகளின் முன்புறமாகவும், சாலையோரங்களில் அமைந்த நிழலான பகுதிகளிலும் அமர்ந்து தங்கள் தொழிலை செய்து வருகின்றனர்.

ஆனால் கால ஓட்டத்தில் பல கைத்தொழில்கள் அழிந்தது போல இந்த கூடை முடையும் மூங்கில் தொழிலும் அழிந்து வருகிறது. அதற்கான மூலப்பொருள் விலையேற்றம், இளைய தலை முறையினர் இத்தொழிலுக்கு வராதது, பிளாஸ்டிக் பொருட்கள் ஆதிக்கத்தால் சரியான விற்பனை வாய்ப்பின்மை என்று இந்த தொழில் சரிவுந¤லை அடைந¢து வருகிறது.ஆங்காங்கே மரக்கன்று வளர்ப்புக்கு பயன்படும் மூங்கில் கூடுகள் போன்ற சிலவிற்பனை வாய்ப்புகள் இருந்தாலும் இத்தொழிலின் பொதுவான எதிர்காலம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

கிட்டத்தட்ட நூறு ஆண்டு காலமாக இப்பகுதியில் நடைபெற்றுவரும் இந்த தொழிலின் அடையாளமாக கூடை முடையும் பெண்களையும், பாய் முடையும் ஆண்களையும் இன்றும் இந்த மேதர் வீதியில் காணலாம்.