ஒப்பிடாமல் நமக்காக வாழ்ந்தால் செலவுகள் அதிகரிக்காது

சிக்கனத்தை கடை பிடித்தால் சிறப்பாக வாழலாம். “பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை” என்பதை போல், தங்கள் குழந்தைகள் வசதியுடன் சிறப்பாக வாழவேண்டும் என்று எண்ணி உழைக்கும் பெற்றோர்கள், சில சமயங்களில் சேமிக்க தவறிவிடுகின்றனர். சிக்கனத்தை கடைபிடித்தால் பணப்பிரச்னை உருவாகாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

எனவே, சிக்கனம் மற்றும் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் உலக சிக்கனத் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், மாத வருமானத்தில் எப்படி சிக்கனத்துடன் சேமிப்பது, எதில் மூதலீடு செய்யலாம் என ஆலோசனை தருகிறார் வா.நாகப்பன் பங்குசந்தை மற்றும் மூதலீட்டு நிபுணர்.

இந்திய மக்களிடம் சேமிப்பு சதவீதம் எப்படி இருக்கிறது?

அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட நாடுகளை ஒப்பிடு, சர்வதேச அளவில் பார்க்கும் பொழுது இந்தியர்களின் சேமிப்பு விகிதம் சிறப்பாகவே இருக்கிறது. ஆனால், இன்றைய தலைமுறையினரிடம் சமீபகாலமாக சேமிப்பு சற்று குறைய தொடங்கியுள்ளது. அதிலும், வீடு வாங்குவது குறைந்துள்ளது. பணி நிமித்தமாக பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயரும் நிலையில் இருப்பதால் வீடுகள் போன்றவற்றில் முதலீடு செய்வதை தவிர்த்து வருகின்றார்.  வருகின்ற வருமானத்தில் நிதி சேமிப்பு, பரஸ்பர நிதி சேமித்து வாழ்க்கையை அனுபவித்தால் போதும் என்ற எண்ணம் மேலோங்கி இருப்பதை பார்க்க முடிகிறது.

காப்பீடும் ஒருவகை சேமிப்பா?

காப்பீடு என்பது நிதி ஆதாரத்தின் அடித்தளம். நிதி திட்டமிடுதலுக்கு முன்பு காப்பீடு அவசியம். பெரும்பாலான மக்களிடம் ஆயுள் காப்பீடும் ஒரு வகை முதலீடு என்ற தவறான கருத்து உள்ளது. இந்தியாவில் தான் காப்பீட்டை முதலீடாக பார்க்கிறோம். நாம் இல்லாத சூழலில் நமது குடும்பத்தினரை நிதி சார்பாக ஆயுள் காப்பீடுகள் காப்பாற்றுகிறது. அதேபோல் தான் மருத்துவ காப்பீடும். இந்த காப்பீடுகள் அனைத்தும் எதிர்பாராத சூழ்நிலையில் காப்பாற்றும் ஒரு விஷயம் தானே தவிர, அது முதலீடு கிடையாது. குறைந்த கட்டணம் கட்டி அதிக கவரேஜ் கொண்ட பாலிசிகளை எடுத்துக் கொள்ளலாம்.

எது சிறந்த முதலீடு?

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் குறிப்பிட்ட சில முதலீடுகள் சிறப்பாக செயல்பட்டு நல்ல ஆதாயத்தை கொடுத்திருக்கிறது. உதாரணமாக 2003-ல் இருந்து 2012 வரை தங்கத்தின் விலை  மிகப்பெரிய ஏற்றத்தை சந்தித்தது. அதேபோல், 1990-களின் துவக்கத்தில் இருந்து 2009 வரை ரியல்எஸ்டேட் துறை சிறப்பாக இருந்தது. பங்கு சந்தையை பொறுத்தவரை அவ்வப்போது ஆதாயம் ஏற்ற இறக்கங்களை பார்க்க முடிகிறது. ஆனால், அதே  ரியல்எஸ்டேட் துறை கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய லாபத்தை கொடுக்க வில்லை. கடந்த ஓர் ஆண்டு மட்டும் விதிவிலக்கு. 2008 தொடங்கி 2020 வரைக்கும் பெரிய ஆதாயம் இல்லை சொல்லப் போனால் பணவீக்கத்தை ஒப்பிட்டுக்கலையில் நஷ்டம்தான் வந்திருக்கும். இதேபோல் 2012 முதல் 2015 கால கட்டங்களில் தங்கத்தின் விலையில் 15-20 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்தது. ஆகையால், மோசமான முதலீடு சிறப்பான முதலீடு என்று பிரித்து பார்க்க முடியாது. அதனால், பணத்தை பிரித்து முதலீடு செய்வது சிறந்தது. ஒரு பகுதியை தங்கத்திலும், சிறு பகுதிகளை ரியல் எஸ்டேட் சார்ந்து செய்வது, பங்குச்சந்தைகள் சார்ந்து முதலீடுவது போன்று செய்யவேண்டும்.

தங்கம் vs பங்கு சந்தை எதில் முதலீடு செய்யலாம்?

நமது இலக்கை தீர்மானித்துக் கொண்டு நீண்ட கால சேமிப்பு & குறுகிய கால சேமிப்பு என பிரிக்க வேண்டும். உதாரணத்திற்கு, அடுத்த 2-3 ஆண்டுகளில் வீடு கட்டுவது, கார், பைக் போன்றவைகளை வாங்க திட்டமிட்டால் பங்கு சந்தைகளில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். நாம் குறுகிய கால முதலீடாக பங்குசந்தையிலும், நீண்ட கால முதலீடாக தங்கத்திலும் செய்கிறோம். இதனால் பெரிய அளவில் லாபம் ஈட்ட முடியாது. குறுகிய கால சேமிப்புக்கு நிலையான வைப்பு (fixed deposit) இடைக்கால முதலீடுக்கு தங்கம், நீண்ட கால அடிப்படியில் பங்கு சந்தை சார்ந்த முதலீடுகள் என பிரித்து முதலீடு செய்வது நல்லது.

முக்கியத்துவம் எதற்கு தரவேண்டும்?

கடந்த காலங்களை ஒப்பிடுகையில் ஒவ்வொரு செலவுகளையும் தற்போது நியாயப்படுத்த தொடங்கிவிட்டோம் என்பதுதான் உண்மை. 30 ஆண்டுகளுக்கு முன்பு எந்த விதமான கேஜெட்டுகள் இல்லாமல், மனிதர்கள் மன நிம்மதியுடன் சவுகரியமாக வாழ்ந்த காலமும் இருந்தது. கேஜெட்டுகள் இல்லாமல் நம்மால் வாழமுடியாது என்பது இல்லை. ஆனால், இவை உற்பத்தி திறன்களை பெருக்கி உள்ளது. அதன் மூலமாக வருவாய் ஈட்டும் திறன் அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக , கடைத்தட்டு மக்களிடம் செல்போன் என்பது அத்தியாவசிய பொருள். தேவை இல்லாமல் அடிக்கடி கேஜெட்டுகளை மாற்றி செலவு செய்வதை தவிருங்கள். அவை உழைக்கும் காலம் வரை உழைக்கட்டும் என்று விட்டுவிடுங்கள்.

எந்த வயதில் சேமிக்க தொடங்க வேண்டும்

நமக்காக நாம் வாழ்ந்தால் செலவுகள் அதிகரிக்காது. மற்றவர்களுக்காக வாழும்போதுதான் செலவுகள் கூடும் பள்ளியில் படிக்கும் போதே சேமிப்பு பழக்கம் தொடர வேண்டும் எப்பதால்தான் சஞ்சாயிகா திட்டம் கொண்டு வரபட்டது. அதனால், வேலைக்கு சென்ற முதல் மாதத்திலேயே சேமிப்பை தொடங்க வேண்டும். சேமிப்பை தள்ளிப்போடும் ஒவ்வொரு மாதமும் நமது ஒய்வு வயதை தள்ளிப்போடுகிறோம் என்பதை மனத்தில் கொள்ள வேண்டும்.