மாணவர்களை தொழில்முனைவர்களாக உருவாக்குங்கள்! -சுரேஷ் சுக்கப்பள்ளி

தமிழ்நாட்டில் முதல் முதலாக துவங்கப்பட்ட சுயநிதி பொறியியல் கல்லூரியான தமிழ்நாடு பொறியியல் க‌ல்லூ‌ரி‌யி‌ன் 40வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கல்லூரி முதல்வர் முனைவர் கார்த்திகேயன் ஆண்டு அறிக்கை வெளியிட்டார். கல்லூரியின் முதன்மை செயல் அலுவலர் அனுஷா ரவி வழங்கிய வாழ்த்துரையில்,‘கல்லூரி நட்பைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் பலர் தங்களது கல்லூரி நட்பின் காரணமாக தங்களது தொழிலில் உயர்ந்துள்ளார்கள்’ என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து, கல்லூரியின் தலைவர் ரவி சிறப்புரை ஆற்றினார். மேலும் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான சிறப்பு பயிற்சி மையம் அமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார். கவுரவ விருந்தினராகக் கலந்துகொண்ட சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினரான கொரியா குடியரசின் கெளரவ தூதரக ஜெனரல் மற்றும் எமரிட்டஸ் பீனிக்ஸ் குழுவின் தலைவர், சுரேஷ் சுக்கப்பள்ளி பேசுகையில், ‘வெற்றிக்கு குறுக்கு வழிகள் கிடையாது, அயராத உழைப்பே வெற்றியைத் தரும்’ என்று கூறியதோடு, மேலும் மாணவர்களைத் தொழில் முனைவோர்களாக உருவாக்கும்படி ஆசிரியர்களைக் கேட்டுக்கொண்டார். எவ்வளவு மதிப்பெண் எடுக்கின்றோம், வேலை கிடைக்கிறதா என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் தங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்வதில் முனைப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினார். மேலும், மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்குத் தெளிவாகவும் விரிவாகவும் பதில் கூறி அவர்களை ஊக்குவித்தார்.

இதனைத் தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். இந்த வருடம் பணி பெற்ற மாணவர்களுக்கு உத்தரவுகளை வழங்கி பாராட்டி புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும், மாணவ-மாணவியர் மற்றும் பேராசிரியர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.