யானை தந்தம் விற்க முயன்றவர்கள் கைது, தந்தம் பறிமுதல் -கோவை வனத் துறையினர்

கோவை வனச் சரக எல்லைக்கு உட்பட்ட வடவள்ளி பகுதியில் சட்ட விரோதமாக யானை தந்தம் விற்க முயற்சி செய்வதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கோவை வனச் சரக அலுவலர் தலைமையில் கோவை வனச் சரக பணியாளர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்ட போது சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த விசாகன் (வயது-40) நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது-40), வடவள்ளி பகுதியைச் சேர்ந்த பிரிட்டோ (வயது-43) மற்றும் செல்வராஜ் (வயது-38) ஆகியோர் யானை தந்தத்தைச் சட்ட விரோதமாக விற்க முயற்சி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து விற்பனைக்காகப் பயன்படுத்தப்பட்ட யானை தந்தம் ஒன்று கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து வடவள்ளி பகுதியைச் சேர்ந்த பிரிட்டோ மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் யானை தந்தமானது சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த விசாகன் என்பவரது வீட்டில் வைத்து இருந்ததாகவும் அதனை சட்ட விரோதமாக விற்பனை செய்ய முயற்சி செய்ததாகவும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி தலைமறைவான மேலும் இருவரை தனிக் குழு அமைத்து தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.