பி.எஸ்.ஜி கல்லூரியில் பேராசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா

அறிவை புதுப்பித்துக் கொண்டே இருங்கள்!

– கீதாலட்சுமி, துணைவேந்தர், தமிழ்நாடு வேளாண் பல்கலை

பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆராய்ச்சி மற்றும் அகாடமிக் எக்சலன்சில் சிறந்து விளங்கிய பேராசிரியர்களை கவுரவிக்கும் விதமாக விருதுகள் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை நடைபெற்றது.

நிகழ்விற்கு கல்லூரியின் துணை முதல்வர் அன்புராஜ் வரவேற்புரை வழங்கினார்.

கல்லூரியின் முதல்வர் பிருந்தா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். அவர் பேசுகையில்: ஆசிரியர்கள் எப்போதுமே நாட்டின் முதுகெலும்பாக திகழ்கின்றனர். ஒரு மாணவனின் ஒழுக்கம் மற்றும் திறனை வடிவமைப்பதில் அவர்கள் மிகவும் முக்கிய பங்கு வகிப்பதோடு,
இளம் வயதினரை சரியான வழியில் நல்வழிபடுத்துவத்திலும் ஆசிரியர்கள் பங்காற்றுகின்றனர்.

எதிர்கால தலைமுறையை நல் முறையில் உருவாக்கி, நாட்டை கட்டமைப்பதில் அவர்கள் முக்கியமானவர்கள் எனப் பேசினார்.

பி.எஸ்.ஜி நிர்வாகம் எப்போதும் கடின உழைப்பாளிகளை கவுரவிக்க தவறியதில்லை என்றும் இந்த விருது வழங்கும் விழாவில் அவர் குறிப்பிட்டார்.

மேலும் ஆசிரியர்கள் மாணவர்களின் வெற்றிக்கு காரணமாக இருக்கின்றனர். இங்குள்ள ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தனித்துவமாக தங்களது உழைப்பை தருகின்றனர் எனப் பாராட்டி அவர்கள் இன்னும் அதிக உயரத்தை தொட வேண்டும் என வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி கலந்துகொண்டு பேராசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

அவர் கூறியதாவது: பாராட்டு நம்மை மேலும் மேலும் ஊக்குவிக்கும் என்றும், ஒரு செயலை இன்னும் சிறப்பாக செயல்பட தூண்டும் என்றும் கூறினார். பி.எஸ் ஜி நிறுவனம் எப்போதும் சிறப்பாக செயல்படும். அதனாலேயே இதுபோன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்துகின்றனர் என தெரிவித்தார்.

ஒவ்வொரு கல்வி நிறுவனமும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக தங்களது பங்களிப்பை ஆற்றுகின்றனர் எனக் கூறிய அவர், ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்புகளுக்கு பின்னாலும் ஒரு இந்தியரின் யோசனை இருப்பதாக கூறினார்.

சிறந்த திறன் என்பது ஒரு நாளிலேயே வந்து விடாது அதற்கு சில காலங்கள் ஆகும். மேலும் தனிப்பட்ட வாழ்க்கையையும், பணி சூழலையும் இரண்டையும் சமமாக கையாளுவது அவசியம் என்றார்.

இவ்வுலகில் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகிக்கொண்டே இருக்கும். அதற்கு ஏற்றவாறு நமது அறிவை புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும் விருதினை பெற்ற பேராசிரியர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார்.

இந்த நிகழ்வில் 200 பேராசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. நிகழ்வில் கல்லூரியின் செயலாளர் கண்ணையன், துணை முதல்வர்கள் ஜெயந்தி, உமாராணி துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.