பிரதமர் மோடியிடம் தலைமைப் பொறுப்பு ஒப்படைப்பு

இந்தோனேசியாவில் ஜி 20 மாநாடு நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்த ஆண்டு மாநாட்டை நடத்துவதற்கான தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜி 20 நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, கனடா, பிரேசில், பிரான்ஸ், சீனா, இந்தியா, ஜெர்மனி, இத்தாலி, இந்தோனேசியா, கொரியா குடியரசு, ஜப்பான், ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, இங்கிலாந்து, துருக்கி, அமெரிக்கா ஆகிய 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரத்தில் நடைபெற்று வருகிறது. ’ஒன்றாக மீள்வோம், வலுவாக மீள்வோம்’ என்ற மையக் கருத்தின் அடிப்படையில் இந்த ஜி 20 மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆலோசித்தனர்.

சுகாதாரம், எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் நிதி பரிமாற்றம் என 3 தலைப்புகளின் கீழ் இந்த மாநாட்டின் மூன்று அமர்வுகள் நடைபெற்றன.

கடைசி நாளான இன்று அடுத்த ஆண்டு ஜி20 மாநாட்டின் தலைமைப் பொறுப்பேற்கும் இந்தியாவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

பிரதமர் மோடியிடம், தலைமைப் பொறுப்பை இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ  வழங்கினார்.

தலைமைப் பொறுப்பில் இந்தியா

ஓர் ஆண்டு தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தியா, உலகளாவிய பிரச்சினைகளான பருவநிலை மாறுபாடு, தீவிரவாதப் பிரச்சினை, கடன்பிரச்சினை, கொரோனா தாக்கம்,  உள்ளிட்டவற்றுக்கு தீர்வு காண முயலும்.

வரும் 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் ஜி 20 நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட படத்தில் ஜி 20 லோகோவில் தாமரை சேர்க்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக இந்த இலச்சினை இந்திய தேசியக் கொடியின் 4 நிறங்களையும் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பூமி தாமரை மீது அமர்ந்திருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 7 இதழ்களும் உலகின் 7 கண்டங்களும் ஜி20 மாநாட்டில் ஒன்றிணைவதை குறிக்கிறது. இதில் உள்ள பூமி, இந்தியாவின் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் கொள்கையைப் பிரதிபலிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

– கோமதிதேவி.பா