அடிக்கடி அதிகாரிகள் மாற்றம்…, வேண்டுகோள் விடுக்கும் வானதி சீனிவாசன்

டாடாபாத் பகுதியிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மியாவாக்கி முறையில் குறுங்காடுகள் வளர்க்கும் ‘விருட்சம்’ எனும் திட்டம் தொடங்கப்பட்டது. இதனை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் மரக்கன்றுகளை நடவு செய்து துவக்கி வைத்தார்.

பின்பு  செய்தியாளர்களை சந்தித்து பேசிய வானதி சீனிவாசன், “கோவை தெற்கு தொகுதியில் பல்வேறு திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சியில் உள்ள 7 பள்ளிகளில் குறுங்காடுகள் வளர்க்கும் ‘விருட்சம்’ எனும் திட்டத்தை துவக்கி உள்ளோம். இதனால் குழந்தைகளுக்கு மரம் நடும் பொறுப்பு உண்டாகும்” என்றார்.

தொடர்ந்து, அண்ணாமலை குறித்து அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் செய்ததற்கு பதிலளித்த வானதி சீனிவாசன், “திமுக பைல்ஸ், எக்ஸ்பிரஸில் ஏறுகிறதா ஜெட்டில் ஏறுகிறதா என்பதை பார்க்கத்தான் போகிறோம்” என்றார். மேலும் அவர் பேசுகையில், மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு கற்பிக்க ஆசிரியர்கள் இல்லை. அதுமட்டுமில்லாமல் அடிப்படை வசதிகளும் இல்லை. மேலும் மாநகராட்சியில் கொசு மருந்து அடித்து பார்த்ததே இல்லை என்று குற்றம் சாட்டினார்.

மாநகராட்சி ஆணையாளர் மாற்றத்திற்கு பதிலளிக்கையில்  “அரசு அதிகாரிகள் தன்னுடைய வேலையை செய்வதற்கு முன்னரே மாற்றம் செய்யப்படுகிறார்கள். அடிக்கடி அதிகாரிகள் மாற்றம் செய்வதை கைவிட வேண்டும்” என்றவர்….,  திரைத்துறையால் திமுக செழிப்பாக உள்ளது. அவர்களை தவிர்த்து விட்டு திரைப்படங்களை எடுத்தால் வெளியீட்டிற்கு திரையரங்கம் கிடைக்காது. இதற்கு முன் உதாரணம் தான் லியோ. என்றார்.