கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் “நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அண்மைய கண்டுபிடிப்புகள்” குறித்த ஏழாவது பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

மூன்று நாட்கள் நடைபெறும் இதில் இளவேனில் அறிவியல் அமைப்பு, இந்திய படிக வளர்ச்சி அமைப்பு (IACG) மற்றும் இந்திய நிறமாலை இயற்பியல் அமைப்பு (ISPA) ஆகியவற்றுடன் இணைந்து கல்லூரியின் இயற்பியல் துறை இக்கருத்தரங்கை நடத்துகிறது.

கல்லூரியின் முதல்வர்  இராமசாமி, சிறப்பு விருந்தினர்கள்  இளவேனில் அறிவியல் அமைப்பின் தலைவர் சீதாராமன் தலைவர்,  ஐசிஆர்ஐஎம்எஸ்டி-2024 சங்கர் மற்றும் இந்தியப் படிக வளர்ச்சி அமைப்பின் தலைவர் ராமசாமி ஆகியோர் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தனர்.

பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தின் தலைவர் உமேஷ் வி வாக்மாரே மற்றும் பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் குழந்தைவேல் ஆகியோர் கருத்தரங்க ஆய்வு கோவையை வெளியிட்டனர். இதில் விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் உட்பட அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப துறை  சார்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் 417 ஆய்வுச் சுருக்கங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. அதோடு 60 வாய்வழி விளக்க உரைகள், 350க்கும் மேற்பட்ட சுவரொட்டி விளக்க உரைகள், மற்றும் 15 ஆய்வேட்டு விளக்க உரைகள் இடம்பெறுகின்றன. மேலும் 104 அறிஞர்களின் உரையும் 15 மையக் கருத்துகளில் இடப்பெற்றன.மேலும் 2023க்கான வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

“தமிழ் மொழியில் அறிவியல் ஆராய்ச்சிகளை முன்னெடுப்பதும், தமிழில் கலைச்சொற்களை உருவாக்குவதுமே இந்த கருத்தரங்கின் முக்கிய நோக்கம்” என கல்லூரியின் முதல்வர் ராமசாமி தெரிவித்தார்.