கே.எம்.சி.ஹச் கல்லூரி மாணவர்களுக்கான துவக்க விழா

கே.எம்.சி.ஹச் மருந்தியல் கல்லூரியின் 2023-24 கல்வியாண்டின் பி.பார்ம், பார்ம்.டி, எம்.பார்ம், டி.பார்ம் மாணவர்களுக்கான துவக்க விழா என்.ஜி.பி கலையரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் டாக்டர்.என்.ஜி.பி. கல்வி நிறுவனங்களின் இயக்குநர் முத்துசாமி தலைமை வகித்தார். மேலும் என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளை முதன்மை இயக்குநர் நடேசன், கே.எம்.சி.ஹச் மருந்தியல் கல்லூரி முதல்வர் ராஜசேகரன், துணை முதல்வர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில் வரவேற்புரை வழங்கிய முதன்மை இயக்குநர் நடேசன், கல்வி நிறுவனம் மற்றும் பல்வேறு பாடத்திட்டம் குறித்த தகவல்களை மாணவர்களிடம் எடுத்துரைத்தார். அதோடு மாணவர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுங்கு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தையும் மேற்கோள் காட்டினார்.

கே.எம்.சி.ஹச் மருந்தியல் கல்லூரி முதல்வர் ராஜசேகரன் பேசுகையில், மருந்தியல் கல்வியின் நடைமுறைகள், சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பில் மருந்தாளரின் பொறுப்புகள் மற்றும் ஒழுக்கத்துடனான கல்வியின் முக்கியத்துவம் குறித்து பகிர்ந்துகொண்டார்.

தொடர்ந்து கல்வி இயக்குநர் முத்துசாமி விழாவில் பேசுகையில், மருந்தியலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, நேர மேலாண்மை, தொழில் மேம்பாடு, வாழ்க்கைத் திறன்கள், தேர்வு முறை, இலக்கு அமைத்தல், ஆன்லைன் கற்றல் வளங்கள் மற்றும் உலகளாவிய வேலை வாய்ப்புகள் குறித்து விளக்கினார்.

இவ்விழாவில் துணை முதல்வர் சுரேஷ்குமார் நன்றியுரையாற்றினார்.  மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள், கே.எம்.சி.ஹச் மருந்தியல் கல்லூரியின் நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.