மத்திய இணைய முகப்பில் பதிவு செய்யலாம்; எம்.பிக்கு நன்றி தெரிவித்த வேளாண்மை கூட்டுறவு சங்கம்

கோவை துடியலூா் வேளாண்மை சேவை கூட்டுறவு சங்கத்தின் கலப்புஉரம் தயாரிப்பு அலகை மத்திய இணைய முகப்பில் பதிவு செய்ய அனுமதி.

கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி கோரிக்கையை ஏற்று கோவை துடியலூா் வேளாண்மை சேவை கூட்டுறவு சங்கத்தின் கலப்புஉரம் தயாரிப்பு அலகை மத்திய இணைய முகப்பில் பதிவு செய்ய அனுமதி வழங்கியது ரசாயணம் மற்றும் உரங்கள் அமைச்சகம்.

துடியலூர் வேளாண்மை சேவைகள் கூட்டுறவு சங்கத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் உறுப்பினா்களாக உள்ளனா். இச்சங்கம் மத்திய அரசின் அனுமதியோடு நீண்ட காலமாக கலப்புஉரத் தயாரிப்பு செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகிறது.  சமீபத்தில் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் உரத் தயாரிப்பு மையங்கள் அனைத்தும் மத்திய அரசின் இணைய முகப்பில் பதிவு செய்ய வேண்டும். இதனையடுத்து, பதிவு செய்யும் காலக்கெடு முடிவடைந்த நிலையில் துடியலூர் வேளாண்மை சேவைகள் கூட்டுறவு சங்கத்தினை, பல்வேறு காரணங்களால் இணைய முகப்பில் பதிவு செய்ய முடியாமல் போனது.

இந்நிலையில், மத்தய அரசின் இணைய முகப்பில் பதிவு செய்ய காலநீட்டிப்பு செய்ய வேண்டும் என துடியலூர் வேளாண்மை சேவைகள் கூட்டுறவு சங்கத்தினா் நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமாரிடம் கோரிக்கை விடுத்து இருந்தனா்.

இதையடுத்து மத்திய குடும்ப நலன், ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சா் டாக்டர்.மன்சுக்மாண்டவியா அவா்களை கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி டெல்லியில் சந்தித்து துடியலூர் வேளாண்மை சேவைகள் கூட்டுறவு சங்கத்தினரின் கோரிக்கையை எடுத்துரைத்தார்.

ராஜேஸ்குமாரின் கோரிக்கை கடிதம்

விவசாயிகளின் துயர் துடைக்க மத்திய குடும்ப நல மற்றும் ரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சருக்கு  எம்.பி  ராஜேஸ்குமார் எழுதியுள்ள கடிதத்தில், 1955 ஆம் ஆண்டு முதல் டி.யூ.இ.சி.எஸ் என அறியப்படும் துடியலூர் கூட்டுறவு வேளாண்மை சங்கம் தரமான பொருட்களை வழங்குவதன் மூலம் விவசாயிகளுக்கு சேவை செய்து வருகிறது.

தமிழ்நாடு கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு லிமிடெட்,    தி துடியலூர் கூட்டுறவு வேளாண்மை சங்கம், என்.சி.எம்.எஸ ஆகிய மூன்றும் தமிழ்நாடு அரசினால் செயல்படுத்தப்படும் கலப்புஉரம் அலகுகள் ஆகும். எருக்கலவைகளை உற்பத்தி செய்ய, இந்தக் கலவை அலகுகள் என்.பி.கே ஊட்டச்சத்துக்களின் அடிப்படையில் உரக்கலவைகளை உற்பத்தி செய்கின்றன. நேரடி உரங்களான யூரியா டி.ஏ.பி,சூப்பர் பாஸ்பேட், எம்.ஓ பொட்டாஷ் போன்றவை வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையின் வழிகாட்டுதல் மற்றும் உரிமத்தின் அடிப்படையில் நேரடியாக கூட்டுறவு சங்கத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன.

மத்திய ரசாயன மற்றும்  உரத்துறையின் வழிகாட்டுதல்படி, ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை அமைப்பின் இணைய முகப்பில் துடியலூர் வேளாண்மை சேவைகள் கூட்டுறவு சங்க கலப்பு உரத் தயாரிப்பு அலகினை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறின் காரணமாக இணைய முகப்பில்பதிவு செய்ய சிக்கல் ஏற்பட்டது. எனவே தாங்கள் விவசாயிகளின் நலன் கருதி மாநில ஒருங்கிணைப்பாளருக்கு சிக்கலைத் தீர்க்க அறிவுறுத்தும் படி கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

இதையடுத்து, ராஜேஸ்குமாரின் இந்த கோரிக்கையை ஏற்று மத்திய ரசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சர் டாக்டர்.மன்சுக்மாண்டவியா தமிழ்நாடு விவசாயத்துறை இயக்குனருக்கு வரும் 27 ஆம் தேதி வரை கோவை துடியலூா் வேளாண்மை சேவை கூட்டுறவு சங்கத்தின் கலப்பு உரத் தயாரிப்பு அலகை மத்திய இணைய முகப்பில் பதிவு செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

எம்.பி யின் இந்த கோரிக்கையை ஏற்று, கோவை துடியலூா் வேளாண்மை சேவை கூட்டுறவு சங்கத்தின் கலப்பு உரத் தயாரிப்பு அலகை மத்திய இணைய முகப்பில் பதிவு செய்ய அனுமதி வழங்கியுள்ளதால் துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் மற்றும் இந்நிறுவனத்திலிருந்து பயன்பெறும் விவசாயிகள் நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராஜேஸ்குமாருக்கு நன்றி தெரிவித்துள்ளனா்.