மனிதர்களின் அலட்சியத்தால் தான் வனவிலங்குகள் ஊர்பகுதிகளுக்கு வருகிறது

முன்னொரு காலத்தில் மனிதர்களின் வாழ்வியல் முறைகள் வன விலங்குகள், காடுகளை சார்ந்தே இருந்தது. ஆனால் நாம் தற்போது வனத்தையும், வனவிலங்குகளையும் பாதுகாக்க தவறிவிட்டோம் என்பதே உண்மை.

சமீப காலமாகவே வனவிலங்குகள்  காப்பகத்தின் கீழ் இயங்கும் வனப்பகுதிகளில் புலிகள், யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் காடுகளை விட்டு வெளியே வருவது அதிகரித்து வருகின்றது. உணவு மற்றும் தண்ணீருக்காக வனவிலங்குகள்  மனித நடமாட்டம் உள்ள நிலப்பரப்புகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றன.

சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் காட்டுவிலங்குகள் சுற்றித் திரிவது மனிதர்களை அச்சப்படுத்துகிறது.மேலும் மனிதர்களின் செயல்பாடுகளும் விலங்குகளை பயம்கொள்ள வைக்கிறது. இது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே மோதலை உண்டாக்குகிறது.

மின்சார கம்பிகள் தாக்கியும், விஷப்பொருட்களை உண்டும் ஏரளாமான விலங்குகள் உயிரிழக்கிறது. அதோடு மனிதர்கள் வேட்டையாடுவதாலும் வனவிலங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. முன்பிருந்ததை விட யானைகள் மற்றும் புலிகளின் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் விலங்குகள் தாக்கி மனிதர்களின் உயிரிழப்புகளும் ஏராளம் தான்.

மனிதனுக்கும் வனவிலங்குகளுக்கும் மோதல் ஏற்பட முக்கிய காரணம் விலங்குகள் வாழிடத்தில் ஏற்படும் மாற்றங்கள். காடுகள், மலையடிவாரங்களில் உள்ள மேய்ச்சல் நிலங்கள் விவசாய நிலங்களாக மாறியுள்ளது. விலங்குகளின் வாழ்வாதாராமான வனப்பகுதி, மலைப்பகுதி, நீர்நிலைகள் போன்றவற்றின் ஆக்கிரமிப்பதால் தான் இது போன்ற சம்பவங்கள் தொடர்கின்றன. நமது அலட்சியத்தால் தான் விலங்குகள் நம் இருப்பிடத்திற்கு வருகின்றன.

காடுகளும், காட்டுவிலங்குகளும் ஒன்றையொன்று சார்ந்தது. அவற்றில் எது பாதிக்கப்பட்டாலும் நமக்கும் அபாயமே. இயற்கைவளங்கள் மனிதர்களுக்கானது மட்டுமல்ல. அதனை பாதிக்காத வண்ணம் வாழ்வதே நமக்கும் நம் சுற்றுசூழலுக்கு சிறந்தது.