கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியின் தேசிய நலப்பணித்திட்ட தன்னார்வலர் மற்றும் திட்ட அலுவலருக்கு விருது

அண்ணா பல்கலைக்கழகத்தில் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளின் தேசிய நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் மற்றும் தன்னார்வ மாணவர்களில் 2021-22 ஆண்டிற்கான சிறந்த சேவை புரிந்தோர்க்கு விருது வழங்கும் விழா அண்மையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்ட நாட்டு நல பணித்திட்ட தன்னார்வலர்கள் மற்றும் திட்ட அலுவலர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவி எஸ்.தனுஜாவுக்கு தன்னார்வலர் விருதும், பி.அணில் குமாருக்கு சிறந்த திட்ட அலுவலர் விருதும் வழங்கப்பட்டது.

கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் மு.அகிலா இது பற்றி கூறும்போது, ‘மாணவர் தன்னார்வலர் மற்றும் திட்ட அலுவலர் ஆகியோரின் சிறப்பான பங்களிப்புக்காக அங்கீகரிக்கப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியின் தேசிய மாணவர் படை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த விருது வரும் ஆண்டுகளில் கல்லூரியின் தேசிய மாணவர் படை மேலும் சிறப்பாக செயல்பட உத்வேகத்தை அளிக்கும்’ என்று கூறினார்.