
என்.ஜி.பி கல்லூரியில் பட்டமளிப்பு விழா
கோவை காளப்பட்டியில் அமைந்துள்ள டாக்டர் என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 20 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் எலும்பியல் துறை தலைவர் திருமலைசாமி கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார்.
தனது பட்டமளிப்பு உரையில் அவர் பேசியதாவது:
தனது கல்லூரி அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, பட்டம் பெறும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
பட்டமளிப்பு விழா உடன் மாணவர்களின் கற்றல் முடிந்து விடுவதில்லை. கற்றலுக்கு இதுதான் ஆரம்பம் என்று கூறினார். கல்லூரியில் நீங்கள் கற்றுக் கொண்டதை இனிமேல் தான் வெளி உலகில் பயன்படுத்தப் போகிறீர்கள்.
மேலும் கற்றல் மட்டும் ஒருவருக்கு வாழ்க்கை அல்ல, அதை தாண்டியும் பல விஷயங்கள் உள்ளது. படிப்பை தாண்டிய பல விஷயங்களை ஒருவர் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
குழு செயல்பாடு, வெற்றி தோல்விகளை சமமாக கையாளத் தெரிதல் ஆகியவற்றை அறிந்து கொள்ள வேண்டும். மேலும் மாணவர்கள் தங்கள் கற்றலுடன் விளையாட்டு முதலிய செயல்பாடுகளிலும் ஈடுபட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
ஒரு வேலையை செய்யும் பொழுது அதனை முழு விருப்பத்துடன் செய்ய வேண்டும். திறமை இருந்தால் 100% வெற்றி உறுதி. புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குங்கள் என்றும், உலகை சிறந்ததாக மாற்ற முயற்சி செய்யுங்கள் என்றும் பேசினார்.
கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் நல்ல. ஜி பழனிசாமி தலைமையில் இந்த பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
அவர் தன் தலைமை உரையில் கூறியதாவது: கல்லூரியில் பட்டம் பெறும் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா என்பது ஒரு முக்கியமான நாள் என்று கூறி, பட்டம் பெற்ற மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
மாணவர்கள் வாழ்வில் நல்ல நிலையை அடைய வேண்டும் என்பது தான் தனது விருப்பம் என்பதையும் பகிர்ந்து கொண்டார்.
வாழ்க்கையில் ஒழுக்கம் என்ற வரைமுறையை ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும் எனவும், அதை கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். என்.ஜி.பி கல்லூரி மாணவர்கள் என்றாலே தனி முத்திரையுடன் சிறந்து விளங்குவார்கள் என்று பெருமிதம் படக் கூறினார்.
கொரோனாவினால் இந்த உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் இருந்து இந்தியப் பொருளாதாரம் மீண்டு வந்துள்ளது என்று கூறினார். அதனால் மாணவர்கள் வேலை வாய்ப்பு குறித்து கவலைப்பட வேண்டாம் என்பதையும் பதிவிட்டார்.
மேலும் இங்கு பலவிதமான வாய்ப்புகள் உண்டு. ஆனால் முயற்சி செய்யவில்லை என்றால் எதுவும் நமக்கு கிட்டாது என்ற தனது கருத்தினை கூறினார்.
எந்த செயலை நாம் செய்கிறோமோ அதுதான் நாம், அதற்காக யாரையும் குறை கூற கூடாது. மேலும் எப்படி உரையாட வேண்டும் என்பது தெரிந்து இருக்க வேண்டும் என்றும், அதனை இனிவரும் காலங்களில் கூட மாணவர்கள் கற்றுக் கொள்ளலாம் எனக் கூறினார்.
இப்பட்டமளிப்பு விழாவில் 2016 – 2019 கல்வி ஆண்டில் படித்த 1200 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் டாக்டர் என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலாளர் தவமணி தேவி பழனிசாமி, கே.எம்.சி.ஆர்.இ.டி அறங்காவலர் அருண் பழனிசாமி, கல்லூரியின் முதல்வர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.