மகாராஜனைப் போல் வாழ்ந்தவர் மகாலிங்கம் -பட்டிமனற பேச்சாளர் சுகி சிவம் பேச்சு

சக்தி குழும நிறுவனங்களின் தலைவர் அமரர் அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கமின் நூற்றாண்டு விழா, டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், சக்தி குழும நிறுவனங்களின் தலைவர் ம.மாணிக்கம் வரவேற்புரை வழங்கினார். பாரதிய வித்யா பவன் மற்றும் குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ்வானவராயர் தலைமையுரை வழங்கினார்.

தொடர்ந்து, புத்தகங்கள் வெளியிடும் நிகழ்வு நடைபெற்றது. அதில், வள்ளலாரைக் குறித்து மகாலிங்கம் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து, “வாழ்விற்கு வந்த வள்ளலார்” என்ற புத்தகத்தை பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் வெளியிட, என்.ஐ.ஏ (NIA) கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் மா.பாலசுப்ரமணியம் பெற்றுக்கொண்டார்.

தினமணி துணை ஆசிரியர் வா.மு.முரளியின், இந்திய நாட்டின் 120 விஞ்ஞானிகளை அறிமுகம் செய்கிற நூலான “அக்கினிக்குஞ்சுகள்” தொகுதி- 3 என்ற புத்தகத்தை பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் வெளியிட, அதன் முதல் பிரதியை சாமுண்டீஸ்வரி சர்க்கரை ஆலையின் நிர்வாக இயக்குநர் எம்.ஸ்ரீனிவாசன் பெற்றுக்கொண்டார்.

கலில் ஜிப்ரான் எழுதிய பேரிலக்கிய நூலைத் தமிழில் மொழிபெயர்த்த கவிஞர் சிற்பி அவர்களின் “மனித குமாரன் இயேசு” என்ற புத்தகத்தை பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் வெளியிட, முதல் பிரதியை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் இணைத் தாளாளர் சங்கர் வானவராயர் பெற்றுக்கொண்டார்.

பின்னர், அருட்செல்வர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஓம் சக்தி மாத இதழில் பொதுமக்களுக்காக நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் தலைவர் ம.மாணிக்கம் பரிசுகளை வழங்கினார்.

சிறப்பு விருந்தினர் பட்டிமன்றப் பேச்சாளர் சொல்வேந்தர் சுகிசிவம் பேசுகையில், டாக்டர் மகாலிங்கம் அவர்கள் ஜனக மகாராஜனைப்போல் வாழ்ந்தார்.  கருணையும் தேச பக்தியும் அவரை மக்கள் மனதில் நிலைத்திருக்கும் மனிதனாக மாற்றியிருந்தது. அவரின் உள்ளார்ந்த தலைமைப் பண்புகள் அவர் புகழை ஓங்கச் செய்யும் என்றும் அவரின் வாழ்க்கையிலிருந்து பல்வேறு நிகழ்வுகளை எடுத்துரைத்து புகழாரம் சூட்டினார்.

விழாவில், மகாலிங்கம் அவர்களின் குடும்பத்தினர், பண்ணாரி அம்மன் கல்வி நிறுவனங்களின் தலைவர் எஸ்.வி.பாலசுப்ரமணியம், என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் செயலர் சி.ராமசாமி, தாளாளர் ஹரிஹரசுதன், கல்லூரியின் டீன்ஸ், முதல்வர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் என்.ஐ.ஏ. பள்ளிகளின் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.