வதம் செய்ததால்  வந்த  நாள் – விநாயகர் சதுர்த்தி

சிவபெருமானின் திருநாமத்தை சொல்லிக்கொண்டே கஜமுகாசுரன் என்ற அசுரன் பல ஆண்டு காலமாக கடுமையான தவம் இருந்தார். அவரின் தவத்தை மெச்சிய சிவபெருமான், அசுரன் கண்முன் தோன்றி   உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.

அதற்கு அசுரன் எந்த ஆயுதத்தாலும் எனக்கு மரணம் நேரிடக்கூடாது. அதுமட்டுமில்லாமல் “எதிரிகளின் சூழ்ச்சியால் எனக்கு மரணம் நேரிட்டாலும், எனக்கு இன்னொரு பிறவி கிடைக்கக் கூடாது “என்று சிவபெருமானிடம் வரம் கேட்டார், உடனே அவர் கேட்ட வரங்களை அளித்துவிட்டு மறைந்தார்.

சிவபெருமானிடம் அருள் பெற்ற கஜமுகாசுரன் தான்  பெற்ற வரத்தை  வைத்து தலைகணம் கொண்டு தேவர்களையும் முனிவர்களையும் பல வழிகளில் துன்புறுத்தினார். அரக்கனின் கொடுமைகளைப் பொறுக்க முடியாத தேவர்கள், பிள்ளையாரை வணங்கித் தம்மைக் காக்குமாறு வேண்டினார்கள்.

விநாயகப் பெருமானுக்கும், அசுரனுக்கும் இடையில் கடும் போர் நடந்தது. விநாயகர் தமது அம்புகளால் கஜமுகாசுரனின் படைகளையும், தேர், மற்றும் ஆயுதங்களையும் நொடியில் அழித்தார். ஆனால், அவரது ஆயுதங்களினால் அந்த அரக்கனைக் கொல்ல முடியவில்லை. எந்த ஆயுதத்தாலும் அசுரனை அழிக்க முடியலையே என்று விநாயகர் யோசித்த போது சிவபெருமான் தனது மகனுக்காக குரல் கொடுத்தார். மகனே, கஜமுகாசூரனை எந்த ஆயுதத்தாலும் கொல்ல முடியாது. என்று சொல்லவே, சற்றும் யோசிக்காமல் தனது வலது தந்தத்தை ஒடித்து கஜமுகாசூரனை வதம் செய்தார்.

நிலைகுலைந்து வீழ்ந்த அரக்கன் மூஞ்சூறு போல மாறினான். ஞானம் பெற்ற மூஞ்சூறு விநாயகரின் பாதங்களின் வீழ்ந்து வணங்கினான். அந்த மூஞ்சூறுவை தனது ஞானக்கண்ணால் பார்த்த விநாயகர் தனது வாகனமாக்கிக் கொண்டார்.

ஆவணி மாத சதுர்த்தியன்று அசுரனை கொன்று தேவர்களை மீட்டு எடுத்த அந்த திருநாளை அன்று முதல் இன்று வரை நாம் விநாயர் சதுர்த்தியாக கொண்டாடி  வருகிறோம்.

விநாயகர் பற்றி சுவாரிஸ்யமான தகவல்கள்

  1. விநாயகர் என்ற பெயர் வர காரணம் ‘வி’என்றால் இதற்கு மேல் இல்லை என்றும், ‘நாயகர்’ என்றால் தலைவர் இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட பெயரிடப்பட்டது.
  2. விநாயகர் தாய் தந்தையரை அன்புடன் வழிபட்டதால் ‘பிள்ளை’ என்ற பெயருடன் ‘ஆர்’ என்ற பன்மை விகுதி பெற்றுப் பிள்ளையார் என்று பெயர் பெற்றது.
  3. விநாயகருக்கு ஒரு கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள் உள்ளது.
  4. பிள்ளையார் 15 பெண்களை திருமணம் செய்து கொண்டவர். அந்த 15 தர்மபத்தினிகள் சித்தி, புத்தி, வல்லமை, மோதை, பிரமோதை, சுமகை, சுந்தரி, மனோரனம், மங்கலை, கேசினி, சாந்தை, சாருகாசை, சுமத்திரை, நந்தினி, காமதை.
  5. விநாயகருக்கு விநாயகி, வைநாயகி, வின்கேஸ்வரி, கணேசினி, கணேஸ்வரி ஐங்கினி எனும் பெண்பால் சிறப்பு பெயர்களும் உண்டு.
  6. முதன் முதலாக விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்து வழிபட்டவர் வசிஷ்டரின் மனைவியான அருந்ததி.
  7. புத்த மதத்திலுள்ள மஹாயான பிரிவில் ஒரு தெய்வமாக கருதப்படும் விநாயகர் அங்கு நடனமாடும் தெய்வமாகக் காணப்படுகிறார்.
  8. விநாயகர் 32 உருவம் மற்றும் 108 பெயர்களை  கொண்டவர்.
  9. இந்தோனேசியாவில் இருபதாயிரம் ரூபாய் தாள்களில் கணேசாவின் உருவப்படம் அச்சிடப்பட்டுள்ளது.

 

Article by:  பா.கோமதி தேவி