வெவ்வேறு நிறங்களில் பால் பாக்கெட் எதை உணர்த்துகின்றன?

முன்பெல்லாம் கிராமங்களில் பசும்பால் கொண்டே டீ, காபி, தயிர், மோர் போன்ற பானங்கள் தயாரிக்கப்படும். அவை உடலுக்கும் நல்ல ஆரோக்கியத்தை தந்தது. ஆனால் நகரமயமாதலுக்கு பின் நேரடி பசும்பால் அருகிவிட்டது. அதாவது ஆங்காங்கே இருக்கும் நாட்டுப்பால் விற்பனையாளர்களிடம் நேரடியாக சென்று பாலை வாங்கி கொள்ளலாம்.

பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பாலையே தற்போது பெரும்பாலான மக்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர். அதிலும் பச்சை, நீலம், ஆரஞ்ச், பிங்க், பிரௌன் ஆகிய வண்ண நிறங்களில் பால் பாக்கெட் கடைகளில் கிடைப்பதை காணலாம். இந்த நிறங்கள் எதை உணர்த்துகின்றன என்ற எண்ணம் சிலருக்கு எழலாம்.

இந்த வண்ணங்கள் பாலில் உள்ள கொழுப்பு சத்தின் அளவையே குறிக்கின்றன. ஒவ்வொரு வண்ண பால்பாக்கெட்டும் கொழுப்புகளின் அளவில் மாற்றத்துடன் இருப்பதாக சொல்லப்படுகிறது.

நீல நிற பாக்கெட்:

இது சமன்படுத்தப்பட்ட பால் (Toned milk) ஆகும். இவை எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டதால் குழந்தைகள், நோயாளிகள், வயதானவர்களுக்கு ஏற்றது. இதனை நைஸ் பால் என்று அழைப்பார்கள். மீடியமான கொழுப்பு இதில் உண்டு. 100 கிராம் பாலில் 3 கிராம் கொழுப்புச் சத்து உள்ளது.

ஆரஞ்சு நிற பாக்கெட்:

இதில் கொழுப்புச்சத்து நிறைந்து காணப்படுவதால் இதனை ஃபுல் க்ரீம் பால் என்பார்கள். அந்த அளவுக்கு கொழுப்பு அதிகம்.  இந்தப் பாலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தவிர்ப்பதே நல்லது. இதை பெரும்பாலும் இனிப்பு பண்டங்கள் செய்யும் போது மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பிங்க் நிற பாக்கெட்:

பிங்க் பாலை டயட் பால் என்று கூறுவார்கள். உடல் எடை குறைய நினைப்பவர்களும், 55 வயதுக்கு மேற்பட்டவர்களும் இந்த பாலை பருகலாம். அனைவருக்குமே ஏற்றது இந்த பால். ஏனெனில் இதில்  கொழுப்பு குறைவான அளவு உள்ளது. அதனாலேயே இது டபுள் டோண்ட் மில்க் என்று அழைக்கப்படுகிறது.

பச்சை நிற பாக்கெட்:

இதில் கொழுப்பு சற்று அதிகம் காணப்படுகிறது. அதனால் வயதானவர்கள், நோயாளிகள் தவிர்க்கலாம். குறிப்பாக 40 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே எடுத்துக்கொள்ள ஏதுவான பால் என கூறப்படுகிறது. 100 கிராம் பாலில் 4.5 கிராம் கொழுப்பு உள்ளது. இதை நிலைப்படுத்திய பால் பாக்கெட் எனக் கூறுகின்றனர்.

பழுப்பு நிற பாக்கெட்:

இதில் 3.5 கிராம் அளவு கொழுப்பு மற்றும் கொழுப்பு இல்லாத இதர சத்துகளையும் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டில் பொதுவாக கொழுப்பு குறைந்த பிங்க் மற்றும் நீல நிற பால் பாக்கெட்களை பயன்படுத்தலாம். 6 சதவீதம் கொழுப்பு உள்ள பால் பாகெட்களை டீ கடைகளில் அல்லது வீட்டு விசேஷங்களில் பயன்படுத்தலாம்.