அழிந்துபோன புலி இனம்: மீண்டும் கொண்டு வர விஞ்ஞானிகள் முயற்சி

உலகில் 90 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன விலங்குகளில் ஒன்றான டாஸ்மேனியன் புலி இனத்தை, ஜீன் எடிட்டிங் மற்றும் ஸ்டெம் செல் தொழில்நுட்பம் மூலம் மீண்டும் கொண்டுவர அமெரிக்க, ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

டாஸ்மேனியன் புலி ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தது, இதன் முறையான பெயர் தைலசின் (ஓநாய் போன்ற விலங்கு). இவை 1936 ம் ஆண்டு வரை பூமியில் வாழ்ந்தன. உடலின் மேற்பகுதியில் புலிக்கு உள்ளதைப் போல கோடுகள் இருப்பதால் இந்த விலங்குக்கு ‘டஸ்மேனியன் புலி’ என்ற பெயர் வந்தது.

இந்த நிலையில், டாஸ்மேனியன் புலி இனத்தை மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் முயற்சியில் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். ஜீன் எடிட்டிங் மற்றும் ஸ்டெம் செல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இன்னும் 10 ஆண்டுகளில் தைலசைன் விலங்கினை உருவாக்கி காட்டில் விட முடியும் என்றும் இந்த திட்டத்தில் இடம் பெற்ற வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அழிந்துபோன ஒரு உயிரினத்தை மீட்பது சாத்தியமா என்றும், அறிவியல் புதினம் போன்ற கற்பனையே இது என்பதும் மற்ற விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.

டஸ்மேனிய புலி இனத்தைப் போலவே இருக்கும் பைம்மா இன விலங்கின் டி.என்.ஏ.வை எடுத்து அதை ஜீன் எடிட்டிங் முறையில் மாற்றியமைத்து அழிந்துபோன டஸ்மானிய புலிகளை மீண்டும் உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளனர். இப்படி உருவாக்கப்படும் விலங்கு மிகச்சரியாக டஸ்மானிய புலியாகவோ அல்லது அதைப் போல மிக நெருக்கமாகக் காணப்படுவதாகவோ இருக்கும்.

இந்த ஆய்வுத் திட்டத்துக்குத் தலைமை ஏற்கும் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஆன்ட்ரூ பாஸ்க், கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வேட்டையாடி அழிக்கப்பட்ட இந்த தைலசைன் இனக் குட்டி ஒன்றை 10 ஆண்டுகளில் உயிரோடு உருவாக்கிவிட முடியும் என்று நம்புவதாக கூறுகிறார்.

இந்த முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றால், அழிந்துபோன பிறகு மீட்டெடுக்கப்படும் முதல் உயிரினமாக டஸ்மானியப் புலி இனம் இரு்கும்.

இந்த இனப் புலியின் மீட்டெடுப்பு யோசனை 20 ஆண்டுகளாக உள்ளது. ஆஸ்திரேலிய அருங்காட்சியகம் 1999 இல் இந்த விலங்கை குளோன் செய்யும் திட்டத்தை தொடங்கியது. இந்த விலங்கின் மாதிரிகளில் இருந்து டி.என்.ஏ.வை பிரித்தெடுக்கவும், மறு கட்டுமானம் செய்யவும் பல முயற்சிகள் விட்டு விட்டு நடந்தன.

தற்போது இம்முயற்சியை மெல்போர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் டெக்சாஸ் நகரில் இருந்து இயங்கும் கொலோசல் நிறுவனமும் இணைந்து செயல்படுத்த உள்ளன.