100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி `

நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் தமிழகத்தில் (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதையொட்டி ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், நாடாளுமன்றத் தேர்தலில் மாணவர்கள் 100 சதவீதம் வாக்களிக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் தலைமை வகித்தார். பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, வாக்காளர் வாசிக்க, மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

அதைத்தொடர்ந்து, மாணவிகள் முகத்தில் ஓவியங்கள் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், செல்பி பதாகைகள் முன்பு நின்று, செல்பி எடுத்துக் கொண்டனர். விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, மனிதச் சங்கிலி அமைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் எஸ்.பிரகதீஸ்வரன், அ.சுபாஷினி, ஆர்.நாகராஜன், முனைவர் ஆ.சஹானா ஃபாத்திமா, யு.பிரவீன் ஆகியோர் செய்திருந்தனர்.