எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் நாள் விழா 

எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் 40-வது நிறுவனர் நாள் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. கடந்த 1970-ம் ஆண்டு, மறைந்த எஸ்.என். ரங்கசாமி நாயுடுவால் தோற்றுவிக்கப்பட்ட இவ்வறக்கட்டளையின் கீழ் மருத்துவம், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட 19 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் நிறுவனர் நாள் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன்படி 40-வது ஆண்டு நிறுவனர் நாள் விழா கோவை நவ இந்தியா ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசுவாமி தலைமை வகித்து, வரவேற்புரை வழங்கினார். அனைத்து கல்வி நிறுவன முதல்வர்கள் ஆண்டறிக்கை வழங்கினர்.

விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகச் சென்னை சாஸ்த்ரா பல்கலைக்கழக இயக்குநர் மற்றும் இந்தோ ஜப்பான் தலைமைப் பேராசிரியர் மருத்துவர் சுதா சேஷய்யன் கலந்து கொண்டு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றி 25 ஆண்டுகள் நிறைவு செய்த மருத்துவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் 30 பேரை கௌரவித்து விருதுகள் வழங்கினார்.

தொடர்ந்து, ஆர்த்தோ ஒன் கேர் பொது மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்குச் “சிறந்த  நீர் சேமிப்பு தொழில்நுட்ப விருது” வழங்கினார்.

எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர், அறங்காவலர்கள் நரேந்திரன், ராமகிருஷ்ணா, தலைமை செயல் அலுவலர் ராம்குமார், கல்லூரி முதல்வர் சித்ரா  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.