என்.ஜி.பி.  கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் 

டாக்டர்.என்.ஜி.பி.தொழில்நுட்பக் கல்லூரியின் உயிர் மருத்துவப் பொறியியல் துறை சார்பில் “மின்சார வாகனங்களுக்கான அடுத்த தலைமுறை பேட்டரி மேலாண்மை அமைப்பு  ” என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) மூலம் நிதியளிக்கப்பட்ட கருத்தரங்கின்  முதல் நாள் துவக்க விழாவில் கல்லூரியின் உயிர் மருத்துவப் பொறியியல் துறைத் தலைவர் விஜயகுமார் வரவேற்புரையாற்றினார்.  கல்லூரியின் முதல்வர் பிரபா தலைமையுரையாற்றினார்.

முதல் நாள் கருத்தரங்கைக் கோயம்புத்தூர் பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் பேராசிரியர் அசோக் குமார், கருத்தரங்கைத் தொடங்கி வைத்து, ஸ்மார்ட் சார்ஜிங் மற்றும் டிஸ்சார்ஜிங் கான்செப்ட்கள், அதிநவீன பேட்டரி மேலாண்மை அமைப்பு அம்சங்கள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்கள் குறித்த தனது அனுபவத்தையும் அறிவையும் பகிர்ந்து கொண்டார்.

தொடர்ந்து, பொள்ளாச்சி டார்க் எக்யூப்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குநர் கார்த்திக், “தொழில் ஆய்வுகள் மற்றும் மின் வாகனங்களில் எதிர்கால போக்குகள்” என்ற தலைப்பில் தொழில்நுட்ப உரையை வழங்கினார். அதைத் தொடர்ந்து, டாக்டர் என்.ஜி.பி. இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் மின் மற்றும் மின்னணு பொறியியல் துறை பேராசிரியர் ரமாஷ் குமார், “மின்-வாகனங்கள் பயன்பாடுகளுக்கான மல்டி-போர்ட் மாற்றி” என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்.

இரண்டாம் நாள் நிகழ்வில் திருச்சிராப்பள்ளி தொழில்நுட்பக் கழகத்தின் மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையின் பேராசிரியர் ராஜா, மின்சார வாகனங்களுக்கான நவீன மின்சார இயக்கிகள் மற்றும் கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பங்கள் குறித்து தொழில்நுட்ப உரையை நிகழ்த்தினார். தொடர்ந்து, டாக்டர் என்.ஜி.பி. இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி., உயிர் மருத்துவப் பொறியியல் துறை உதவிப் பேராசிரியர்  நெடுமால் புகழேந்தி, ‘கோயம்புத்தூர் மாடலிங் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களின் கட்டுப்பாடு – ஒரு கணிதக் கண்ணோட்டம் ‘ என்ற தலைப்பில் தொழில்நுட்ப உரை நிகழ்த்தினார்.