சொத்துவரி மீதான அபராத வட்டி இன்னும் அமலுக்கு வரவில்லை

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குமரகுரு கல்லூரியில் மாணவர்களுக்கான கல்வி கடன் முகாம் சனிக்கிழமையன்று நடைபெற்றது. இதில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தார்.

இம்முகாமில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி ஆணையர் பிரதாப் , மாநகராட்சி மேயர் கல்பனா மற்றும் வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும் பல்வேறு கல்லூரிகளின் மாணவர்களுக்கு கல்வி கடனுக்காக காசோலைகள் வழங்கப்பட்டது.

முகாமை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் முத்துசாமி, “கோவை மாவட்டத்தில் பல திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழக முதல்வரின் கள ஆய்வு விரைவில் பல மாவட்டங்களில் நடக்க உள்ளது. அதனால் விறுவிறுப்பாக பணிகள் நடக்கிறது. கல்வி கடன் உதவி பெற 3000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். 20 வங்கிகள் இதில் பங்கேற்றுள்ளன. பதிவு செய்த அனைவரும் இன்றே கடன் தொகையை பெறுவர்.

அடுத்தகட்டமாக வருகிற 10-ம் தேதி ஈச்சனாரியிலுள்ள கற்பகம் கல்லூரியில் கல்வி கடன் முகாம் நடக்க உள்ளது. மாணவர்கள் தடையின்றி கல்வி பெற வேண்டும் என்பதற்காகவே இந்த கல்வி இந்த திட்டம். அதோடு கோவை மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மருதமலையில், முக்கியமான சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல்களை தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். கோவை மாநகராட்சியில் சொத்துவரி செலுத்தாவர்களுக்கு 1 சதவீத  அபராத வட்டி விதிக்கும் திட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை. இதற்குரிய கால அவகாசம் அறிவுறுத்தப்படும். அதே வேளையில் வரிகளை  விரைவில் செலுத்தினால் அபராத வட்டி விதிப்பை தவிர்க்கலாம்” என்றார்.