மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்தும் மேக்னிஃபிகோ நிகழ்ச்சி

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் மற்றும் நிர்வாகவியல் துறை இணைந்து மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் மேக்னிஃபிகோ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் சித்ரா முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் க்யுன்டசன்ஸ் பிசினஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான நிர்மல்குமார் ராஜசந்திரன் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்டார்.

விழாவில் பேசிய நிர்மல்குமார் ராஜசந்திரன் “நாட்டின் வளர்ச்சிக்குத் தொழில்துறையே ஆதாரம்” என்று கூறி தொழில்முனைவோர்களுக்கும், தொழில்துறை சார்ந்தோருக்கான ஆலோசனைகளை வழங்கினார்.

கல்லூரி முதல்வர் சித்ரா பேசுகையில், “இன்றுள்ள மாணவர்களால் தான் எதிர்காலத்தில் இந்தியத் தொழில்துறை உலகளவில் முன்னேற்றமடைய உள்ளது. அதனால் மாணவர்கள் தொழில்துறையின் அனைத்துத் தளங்களிலும் ஆற்றல்மிக்கவர்களாக செயல்பட வேண்டும்” என்று மாணவர்களிடம் வலியுறுத்தினார்.

மேலும் இவ்விழாவில் வணிகம் மற்றும் தொழில் சார்ந்த பல்வேறு போட்டிகளில் நடத்தப்பட்டன. அதில் தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளிலிருந்து சுமார் 250 மாணவர்கள் பங்கேற்று தங்களது படைப்பாற்றலையும், திறன்களையும் வெளிப்படுத்தினர்.