தேசிய அளவிலான போட்டியில் தமிழகத்தைச் சார்ந்த வீரர்கள் அனைவருமே வெற்றி

தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் 12 தங்க பதக்கங்களை வென்று வந்த வீரர்களுக்கு கோவை ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

செப்டம்பர் 11ம் தேதி கோவா மாநிலத்தில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களிலிருந்து 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட இப்போட்டியில் தமிழகத்திலிருந்து 12 பேர் கலந்துகொண்டனர்.தமிழகம் சார்பில் பங்கேற்ற அனைவருமே சிலம்பம், சுருள்வாள், வேல்கம்பு, கேடயம் ஆகிய பிரிவுகளில் வெற்றி பெற்று தங்க பதக்கமும், ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையையும் வென்றனர்.

இந்த போட்டியில் கோவை கருமத்தம்பட்டி ஏ.ஆர். ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் ஜோன்ஸ் நேதன் ,அஜீஸ், கண்ணன், இஷானா ஸ்ரீ, பூர்ணிஷா, திரனேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். போட்டியில் வெற்றிபெற்று மாணவர்கள் கோவைக்கு ரயிலில் வந்தனர். அப்போது மாணவர்களின் பெற்றோர் அவர்களை மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.

இதுகுறித்து சிலம்பம் பயிற்சியாளர் ராஜேந்திரன் பேசுகையில், “தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டிகளில் தமிழகம் சார்பில் 12 பேர் கலந்து கொண்டு அனைத்து பிரிவுகளிலும் தங்கம் வென்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பையும் வென்றுள்ளனர். இந்த வெற்றி தமிழகத்திற்கு பெருமை சேர்க்கிறது” என்றும், “பாரம்பரிய கலைகளை கற்கும் மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டிலும், வேலை வாய்ப்புகளிலும் முன்னுரிமை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கூறினார்.