ப்ரோசோன் மாலுக்கு ₹1 லட்சம் அபராதம்

கோவை மாநகராட்சி நிர்வாகம் ப்ரோசோன் மாலுக்கு மழைநீர் வடிகாலை சேதப்படுத்தியதால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விடுத்துள்ளது. அதோடு தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி வடக்கு மண்டல உதவி பொறியாளர் ப்ரோசோன் மாலுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ” கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 21க்கு உட்பட்ட சக்தி பிரதான சாலையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மழைநீர் வடிகாலினை எவ்வித முன்னறிவிப்புமின்றி ப்ரோசோன் நிறுவனம் சேதப்படுத்தியுள்ளது. இச்செயலுக்கு மாநகராட்சி மூலம் அபராதம் நோட்டீஸ் அளித்த பொழுது அதனை வாங்க ப்ரோசோன் மறுத்துள்ளது. எனவே சேதப்படுத்தப்பட்ட மழைநீர் வடிகாலினை சரி செய்வதோடு விதிக்கப்பட்ட அபராதத்தினை உடனடியாக செலுத்த வேண்டும். இதை மறுக்கும் பட்சத்தில் மாலுக்கான குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். மேலும் வணிக வளாகத்தில் செயல்படும் கடைகளை மூட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.