அரசு பள்ளியில் வாக்கரூ அறக்கட்டளை சார்பில் கால்பந்து மைதானம் திறப்பு

கோவை, செட்டிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்கரூ அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட கால்பந்து மைதானத்தை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி திறந்து வைத்தார்

வாக்கரூ இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சமூக சேவை அமைப்பான வாக்கரூ அறக்கட்டளை பல்வேறு சமூக மற்றும் சமுதாய மேம்பாட்டு பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், கோவை, செட்டிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்கரூ அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட அதிநவீன கால்பந்து மைதானம் புதன்கிழமை திறக்கப்பட்டது. இந்த விழாவில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த கால்பந்து மைதானத்தை திறந்து வைத்தார்.

இந்த நவீன மைதானம் இளைஞர்களிடையே விளையாட்டு மீதான ஆர்வத்தை தூண்டும் வகையில் பல்வேறு அதிநவீன சிறப்பு வசதிகளைக் கொண்டுள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் 680 மாணவர்களும் இதை பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கால் பந்து மைதானம் ஒவ்வொரு மாணவருக்கும் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்ற ஒரு இடமாக அமைந்துள்ளது.

 

இது குறித்து வாக்கரூ இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நௌஷத் கூறுகையில்,

அதிநவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கால்பந்து மைதானத்தை இந்த பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். இதுபோன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் விளையாட்டு மீதான ஆர்வம் மாணவர்கள் இடையே அதிகரிக்கும். அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு, கவனச் சிதறல்கள் இல்லாமல் விளையாட்டில் ஈடுபாடு காட்டும்போது அது அவர்களின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் சிறப்பானதாக்கும். மேலும் எங்கள் அறக்கட்டளை மூலம் மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. இது இளம் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான திறன்கள், ஒழுக்கம் மற்றும் வலிமைமிக்க விளையாட்டு உணர்வை மேம்படுத்தும் என்று தெரிவித்தார்.