ஜாதி வாரி கணக்கெடுப்பு பேரவையில் நிறைவேற்றப்படுமா?

தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

நாட்டில் சமூகநீதி, இடஒதுக்கீடு என்ற வார்த்தைகளை அதிகம் உச்சரிக்கும் மாநிலம் தமிழகம் தான். தமிழகத்தில் இருந்து எழுந்து வந்த அரசியல் அழுத்தம் காரணமாக தான் நாட்டின் முதல் இடஒதுக்கீடு சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது.  1951 பேரவைத் தேர்தலுக்கு முன்பு பெரியார் மற்றும் திமுக தலைவர்களான அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் குரல் கொடுத்தாலும், பிரதமர் நேருவிடம் தனக்கு இருந்த மிக நெருங்கிய தொடர்பை பயன்படுத்தி இடஒதுக்கீட்டுக்கான முதல் சட்டத்திருத்தத்துக்கு மூலவராக இருந்தவர் அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரான காமராஜர் என்பதே உண்மை.

இந்தியாவை பொறுத்தவரை ஆங்கிலேயேர் ஆட்சியில் 1931 இல் தான் கடைசியாக ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. சுதந்திர இந்தியாவில் இதுவரை ஜாதி வாரியான கணக்கீடு முறையாக எடுக்கப்படாததால் 1931 இல் எடுக்கப்பட்ட ஜாதி வாரி கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு பிறப்பு விகிதத்தை யூகமாக கொண்டு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, மன்மோகன்சிங் பிரதமராக இருந்த காலத்தில் 2011 இல் ஜாதி வாரி கணக்கெடுப்பு சமூகப் பொருளாதாரத்தை அளவீடாக கொண்டு எடுக்கப்பட்டபோதும் அது பல்வேறு அரசியல் அழுத்தங்களால் வெளியிடப்படவில்லை. இப்போது பீகார் பேரவையில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அங்கு கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது நீண்டநாள் கோரிக்கையாகவே இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை, சட்டநாதன் குழு (1969), அம்பா சங்கர் குழு (1982) ஆகியற்றின் அடிப்படையில் தான் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

காமராஜர் ஆட்சி காலத்தில் முதல் சட்டத்திருத்தத்துக்குப்பின் பிற்பட்டோர் இடஒதுக்கீடு அமல் அமல்படுத்தப்பட்டது. மேலும், 1962 இல் முதல்வர் பதவியைவிட்டு விலகுவதற்கு முன்பு பனையேறும் இந்து நாடார்களை, உயர் வகுப்பில் இருந்து பிற்பட்டோர் வகுப்புக்கு கொண்டுவந்தார் காமராஜர்.

காமராஜருக்கு அடுத்து முதல்வராக இருந்த அண்ணா காலத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்பட்டோர் பட்டியலை திருத்த முன்னெடுப்புகள் நடத்தப்படவில்லை. பின்னர் முதல்வராக வந்த கருணாநிதி, சட்டநாதன் குழு அடிப்படையில் 1973 இல் தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை ஒரு சதவீதம் உயர்த்தியும், பிற்பட்டோர் பட்டியலுக்கான இடஒதுக்கீட்டை 6 சதவீதம் உயர்த்தியும் நடவடிக்கை எடுத்தார்.

மேலும், இந்து நாடார்கள் (ஒட்டுமொத்தமாக), கொங்கு வேளாளர்கள் ஆகியோரை உயர் வகுப்பில் இருந்து பிற்பட்டோர் வகுப்புக்கு கொண்டுவந்தார்.

திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தலின்போது வெற்றிபெறுவதற்காக 15 சதவீத கிறிஸ்தவ நாடார்களின் ஆதரவை பெற ஒட்டுமொத்த கிறிஸ்தவ நாடார்களையும் பிற்பட்டோர் பட்டியலுக்கு கொண்டுவந்தார் எம்ஜிஆர்.

எம்.பி.சி. தொகுப்பு

1980 காலகட்டங்களில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி மிகப்பெரிய அளவிலான போராட்டங்களை மருத்துவர் ராமதாஸ் நடத்திவந்தார். 1989 இல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, பிற்பட்டோர் பட்டியலை பிரித்து வன்னியர்கள், இசை வேளாளர், பரதர்கள் (மீனவர்), பர்தவராஜ குல மீனவர், வண்ணார், நாவிதர், குயவர், ஒட்டர், போயர், குரும்பக்கவுண்டர், சீர்மரபினர்களான கள்ளர், பிரமலை கள்ளர், கொண்டையங்கோட்டை மறவர், செம்பரத்து மறவர், வலையர்கள், அம்பலக்காரர், வேட்டுவ கவுண்டர், தொட்டிய நாயக்கர், ஊராளி கவுண்டர் உள்பட 108 சாதிகளை மிகவும் பிற்பட்டோர் தொகுப்பை (எம்.பி.சி.) உருவாக்கினார்.

வன்னியர் இடஒதுக்கீடு

தொடர்ந்து வன்னியர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு கோரிக்கையை அடுத்தடுத்து வந்த அதிமுக, திமுக அரசுகளிடம் வைத்துக்கொண்டே இருந்தார். இந்நிலையில், கடந்த டிசம்பரில் இதே கோரிக்கையை வைத்து மீண்டும் போராட்ட அஸ்திரத்தை எடுத்தார் ராமதாஸ். தேர்தல் நேரத்தில் எழுந்த இக்கோரிக்கையை நிறைவேற்ற ஜாதிவாரி கணக்கெடுப்புக்காக நீதிபதி குலசேகரன் குழுவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நியமித்தார்.

இக்குழுவின் அறிக்கை வர 6 மாத காலம் ஆகும் நிலையில், தேர்தலுக்கு முன்பாக வன்னியர்களுக்கு 12 சதவீத உள்ஒதுக்கீடாவது வழங்க வேண்டும் என்று தனது நிபந்தனையை தளர்த்தினார்.

ராமதாஸின் கோரிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடைசி நேரத்தில் ஏற்றுக்கொண்டு வன்னியர்களுக்கு மட்டுமன்றி பிற எம்.பி.சி. பிரிவினரும் பயனடையும் வகையில் எம்.பி.சி. தொகுப்பை மூன்றாக பிரித்து அதற்கான மசோதாவை பேரவையில் நிறைவேற்றினார்.

அதன்படி, வன்னியர், வன்னியா, வன்னிய கவுண்டர், கவுண்டர், படையாச்சி, பள்ளி, அக்னிகுல சத்திரியர் என 7 உள்பிரிவுகளை அடக்கிய வன்னியர்குல சத்திரியர் சமூகத்துக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கிடைக்கும் வகையில் ஒரு தொகுப்பும், அம்பலக்காரர், பிரமலை கள்ளர், மறவர், சேர்வை, செம்பநாட்டு மறவர், ஊராளி கவுண்டர், வலையர், வேட்டுவ கவுண்டர் உள்பட 68 சீர்மரபினர் மற்றும் தொட்டிய நாயக்கர், வண்ணார், நாவிதர், குயவர், ஒட்டர், போயர் உள்பட 25 எம்.பி.சி. பிரிவினர் ஆகியோருக்கு 7 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதை தவிர மேலும் 22 எம்.பி.சி. பிரிவினரை தனியாக பிரித்து 2.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. சாதிவாரியான கணக்கெடுப்பு வரை இது அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

நீதிமன்றத் தடை

எம்.பி.சி. தொகுப்பு பிரிக்கப்பட்ட விவகாரம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தனிப்பட்ட முறையில் வெற்றி என்ற வகையிலும், ராமதாசுக்கு ஓரளவு என்ற வகையில் அமைந்தது. எடப்பாடி தொகுதியில் மக்களவைத் தேர்தலின்போது அதிமுக 8,000 வாக்குகள் திமுகவைவிட பின்தங்கியிருந்த நிலையில், வன்னியர் இடஒதுக்கீடு காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். ஆனால், வடதமிழகம் முழுவதும் இது அதிமுகவுக்கு எதிராக வன்னியர் தவிர்த்த பிற சாதியினரை திருப்பிவிட்டது.

குரல்வலை நெரிக்கப்பட்ட சமூகங்கள்

எம்பிசி தொகுப்பை மூன்றாக பிரித்தது தமிழக அரசியல் வரலாற்றில் சமூகநீதிக்கான மற்றொரு மைல் கல் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், 7 சதவீத தொகுப்புக்குள் இருக்கும் சீர்மரபினர்களையும், அரசியல் ரீதியாக குரல் கொடுக்க ஆதரவு இல்லாத வண்ணார், நாவிதர், குயவர், ஒட்டர், போயர், தொட்டிய நாயக்கர் போன்றவர்களையும் இந்த 7 சதவீத தொகுப்புக்குள் அடக்கியதால் அவர்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இப்போது வன்னியர் இடஒதுக்கீடுக்கு உயர் நீதிமன்றத்தில் மதுரை கிளை தடை விதித்துள்ள நிலையில், இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இருப்பினும், குரலற்ற சமூகங்களான வண்ணார், நாவிதர், குயவர், ஒட்டர், போயர், தொட்டிய நாயக்கர் போன்ற சமூகங்களை 7 இல் இருந்து 3 சதவீதம் தனியாக பிரித்து வழங்கும்போது தான் சரியான சமூக நீதியாக இருக்கும். அதற்கான நடவடிக்கையில் முதல்வர் ஸ்டாலின் ஈடுபட்டுவிட்டு தான் இவ்வழக்கில் மேல்முறையீடு செய்ய வேண்டும். அப்போது தான் தனது தந்தையான கருணாநிதி போல உண்மையான சமூகநீதி காவலராக குரலற்ற சமூகங்களும் ஸ்டாலினை வாழ்த்தும் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.

சீர்மரபினர் கணக்கெடுப்பை நாடு முழுவதும் நடத்த பிரதமர் மோடி 2020 நவம்பரில் உத்தரவிட்டார். ஆனால், சீர்மரபினருக்கு மட்டுமே கணக்கெடுப்பு நடத்தினால் பிற சமூகத்தினர் பாதிக்கப்படுவார்கள் என்றும் அதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும்  பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்தார். இதற்கிடையே சீர்மரபினர் கணக்கெடுப்பும் நிறுத்தப்பட்டது.

வன்னியர்கள் போல தங்களுக்கும் தனி ஒதுக்கீடு வேண்டும் என முத்தரையர் வலியுறுத்தினர். தேவேந்திரகுல வேளாளர் தங்களை தலித் பட்டியலில் இருந்து வெளியேற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இதில் முத்தரையர்களை கணக்கெடுத்து தனி ஒதுக்கீடு வழங்குவது சிக்கலாக உள்ளது. அதேபோல தேவேந்திர குல வேளாளர்களை பட்டியலில் இருந்து வெளியேற்றினால் சரியான எண்ணிக்கை தெரியாது. அதேபோல எந்த தொகுப்பில் இணைப்பது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டாலும், தமிழகத்தில் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. முறையான கணக்கெடுப்பு இல்லாததால் அமல்படுத்தவில்லை என ஆளும் கட்சி கூறுகிறது. ஆனால், பி.சி, எம்.பிசி, இட ஓதுக்கூடு, சிறுபான்மையினர், அருந்ததியர் உள்ஓதுக்கூடு ஆகியவை அம்பா சங்கர் அறிக்கையின் படி வழங்கப்பட்டது. அதே நடைமுறையை பின்பற்றி, தங்களுக்கும் இட ஓதுக்கூடு வழங்க வேண்டும் என பொருளதாரத்தில் பின் தங்கியவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வன்னியர்கள், முக்குலத்தோர் போல களத்தில் இறங்கி போராட மாட்டார்கள். திரண்ட வாக்கு வங்கியாக இல்லை என்பதால் இவர்களுக்கு உள் ஓதுக்கீடு இங்கு வழங்கப்படவில்லை. இப்போதைய முதல்வர் இதை கடுமையாக எதிர்த்தார். அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதில் முடிவு எடுத்தால் பிற்பட்டோர் வாக்கு வங்கி பாதிக்கும் என முடிவு எடுக்காமல் விட்டுவிட்டார்.

இப்படி ஜாதி வாரி கணக்கெடுப்பு இல்லாததால் முத்தரையர், தேவேந்திரகுல வேளாளர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் தங்களுக்கான இடதுக்கீடு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

பீகாரில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கர்நாடகத்தில் சித்தாராமையா தலைமையிலான காங்கிரஸ் எடுத்தும் வெளியிடவில்லை. காங்கிரஸ் தலைமையே அதை தடுத்தது. சித்தராமையா ஜாதியினர் அதிகாரத்துக்கு வந்துவிடக்கூடும் என்ற அடிப்படையில் ஒத்தி வைக்கப்பட்டது.

அதேபோல தமிழகத்திலும் சமூக நீதி மேல் அக்கறை கொண்ட ஸ்டாலின் அரசு, ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் இடஓதுக்கீடு வழங்க வேண்டும் என்பது தான் கோரிக்கையாக உள்ளது. கிறிஸ்தவ, இஸ்லாமியர் கணக்கெடுப்பு எண்ணிக்கை உள்ளது. தலித், பழங்குடியினர் கணக்கெடுப்பு உள்ளது. ஆனால், பிசி., எம்.பிசி, ஓசி கணக்கெடுப்பு இல்லை.

இன்னொன்று முத்தரையர், தேவேந்திரகுல வேளாளர், ஆகியோர் கணக்கெடுப்பு நடத்தினால் அரசியல் அதிகாரம் கிடைக்கும் என நம்புகின்றனர். அதிக அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள், வர ஆசைப்படுகின்றனர்.

இப்போது திருச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மட்டுமே அதிகாரத்தில் உள்ள தேவேந்திர குல வேளாளர் பட்டியல் வெளியேற்றம் வந்தால் கட்சிப் பதவிகளுக்கு அதிக வாய்ப்பு வரக்கூடும் எண்ணுகின்றனர். அதேபோல பொதுத்தொகுதிகளில் போட்டியிட முடியும் என எண்ணுகின்றனர்.

1967 க்கு முன்பு அதிகார மையத்தில் இருந்த பிராமணர்கள் உள்ளிட்ட சமூகங்கள், இப்போது சரியான அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்ற மனக்குறையில் உள்ளனர். தங்களுக்கு இணையான சமூகங்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நிலையில் ஒரு எம்.பி., எம்.எல்.ஏ. கூட ஆக முடியவில்லையே என்ற ஆதங்கம் பிராமணர்களுக்கு உள்ளது.

விஸ்வவ கர்மா பரவலாக உள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் எத்தனை முறை அமைச்சரவை மாறியும் ராஜேந்திர பாலாஜி மாற்றப்படவில்லை. மாநிலம் முழுவதும் பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில் வைத்திருந்தார்.

செங்குந்த முதலியார் திராவிட இயக்கம் தோன்றிய காலத்தில் அண்ணா, நெடுஞ்செழியன், என்.வி.நடராஜன், அன்பழன் உள்ளிட்டோர் அதிகாரத்தில் இருந்தனர். கால மாற்றத்துக்குப்பின் தா.மோ.அன்பரசன் மட்டுமே அமைச்சராக உள்ளார். தங்களது எண்ணிக்கைக்கு ஏற்ற பிரதநிதிதத்துவம் கிடைக்கவில்லை என்ற மனக்குறை உள்ளது.

புதிதாக ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால், இதனால் ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய கட்சி பொறுப்புகளில் உள்ள இப்போதைய சில சமூகங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது இருமுனை கருக்குள்ள கேடயம். எனவே இதை கவனமாக கையாள வேண்டிய சூழல் இருப்பதால் திமுக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த யோசிக்க இதுவே காரணம். தமிழகத்தில் சிறிய கட்சிகள், வளர்ந்து வரும் அரசியல் கட்சிகளுக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது சாதகமான சூழலை ஏற்படுத்தக் கூடும்.