சின்ன வெங்காயம் கிலோ 85 ரூபாய் கிடுகிடு உயர்வு!

கோவை வடக்கு பகுதியில் சின்ன வெங்காயம் வரத்து குறைவு காரணத்தால் கடைகளில் கிலோ, 85 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.சின்ன வெங்காயம் இல்லாமல் சமையல் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது.

சின்ன வெங்காயத்திற்கு கோவை மாவட்டம், பல்லடம், செஞ்சேரிமலை, தாராபுரம், குண்டடம், உடுமலை ஆகிய ஊர்களையே நம்பியுள்ளது. அங்கு பயிரிடப்படும் சின்ன வெங்காயம் கோவை மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன. முன்பு சீசனில் மட்டுமே சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு வந்தது. இது, 60 முதல், 70 நாள் பயிர் ஆகும்.ஜனவரி தொடங்கினால் மூன்று மாதங்களுக்கு பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருந்து சின்ன வெங்காயம் வரும்.

அதன் பிறகு நாமக்கல், ராசிபுரம், தமிழக எல்லைப் பகுதிகளில் உள்ள சாம்ராஜ்நகர்,தாளவாடி மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து சின்ன வெங்காய வரத்து இருக்கும்.இதேபோல, கோவை ஆலாந்துறை, தொண்டாமுத்தூர் பகுதிகளில் இருந்தும் சின்ன வெங்காயம், கோவை காய்கறி மார்க்கெட்களுக்கு வருவது வழக்கம். சின்ன வெங்காய பயிருக்கு முக்கிய தேவை தண்ணீர். கடந்த ஒரு சில மாதங்களாக கடுமையான வெயில் நிலவி வருவதால், சின்ன வெங்காய அதிகளவு விளைச்சல் இல்லை. இதனால் வெங்காய வரத்து வெகுவாக குறைந்துவிட்டது.

தற்போது, சின்ன வெங்காயம் கிலோ, 85 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.இது குறித்து காய்கறி வியாபாரிகள் கூறுகையில், ”சின்ன வெங்காயத்தின் வரத்துகுறைவால், தொடர்ந்து விலை அதிகரிக்கிறது. பெரிய வெங்காயம் கிலோ, ரூ.30 முதல், 40 வரை விற்பனை செய்யப்படுகிறது,” என்றார்.