செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவை சிகிச்சை

போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு முறைகேடு விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த 13-ந்தேதி நள்ளிரவில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

வலி தாங்க முடியாமல் அலறி துடித்த செந்தில் பாலாஜியை உடனடியாக ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மத்திய போலீஸ் பாதுகாப்புடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின்னர் செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி குறைந்தது. ஓமந்தூரார் மருத்துவமனை டாக்டர்கள் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் செந்தில் பாலாஜியின் உடலில் 3 ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்காரணமாக அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது என டாக்டர்கள் கூறியிருந்தனர். கடந்த 14-ந் தேதி இதுதொடர்பான முறையான அறிவிப்பும் வெளியானது. ஓமந்தூரார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க அவரது குடும்பத்தினர் விரும்பினர். இது தொடர்பாக கோர்ட்டில் முறையிட்டனர்.

கோர்ட்டு உத்தரவின் பேரில் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி தொடர்ந்து அங்கேயே சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை டாக்டர்கள் செய்து வந்தனர்.

இதுதொடர்பாக அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் செந்தில் பாலாஜிக்கு மேற்கொள்ளப்பட்டது. இதில் அவரது உடல் இருதய அறுவை சிகிச்சையை மேற்கொள்வதற்கு தகுதியாக இருப்பதை டாக்டர்கள் குழுவினர் உறுதி செய்தனர். இதனைத்தொடர்ந்து செந்தில்பாலாஜிக்கு நாளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இந்த தகவலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் செந்தில்பாலாஜிக்கு நாளை அதிகாலையில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது என்று கூறினார். இதையடுத்து காவேரி மருத்துவமனை டாக்டர்கள் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான முன்னேற்பாடுகளை தொடங்கி இருக்கிறார்கள்.

இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின்னர் செந்தில் பாலாஜியை சில நாட்கள் நன்றாக ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுறுத்த உள்ளனர். இதன்படி செந்தில் பாலாஜியை காவேரி ஆஸ்பத்திரியிலேயே சில நாட்கள் வரையில் முழுமையாக ஓய்வெடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியிடம் இனி காவலில் விசாரணை நடத்துவது என்பது சாத்தியமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

இதற்கிடையே செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றியதை எதிர்த்து அமலாக்கத்துறையினர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது. சுப்ரீம் கோர்ட்டில் காலை 10 மணிக்கு பிறகே இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு முன்பாக நாளை அதிகாலையிலேயே செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுவிடும். இதனால் செந்தில் பாலாஜியை காவேரி ஆஸ்பத்திரிக்கு மாற்றிய விவகாரத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள மனு மீது சுப்ரீம் கோர்ட்டு எந்த மாதிரியான தீர்ப்பை வழங்கப்போகிறது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. செந்தில் பாலாஜியை கடந்த 16-ந்தேதி மாலையில் இருந்து அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்திருந்தனர்.

இன்றுடன் 5 நாட்கள் ஆகியும் ஒரு நாள் கூட அவரிடம் விசாரணை நடத்தப்படவில்லை. வருகிற 23-ந்தேதி மாலை 3 மணிக்கு செந்தில் பாலாஜியை காணொலி வாயிலாக ஆஜர்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை காவல் முடிவடைய இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் செந்தில் பாலாஜிக்கு நாளை காலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதால் விசாரணையை தொடங்காமலேயே காவலை முடிக்கும் நிலைக்கு அமலாக்கத்துறை தள்ளப்பட்டு தவிக்கும் நிலை ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.