‘பொய்யான குற்றச்சாட்டுகள்’ !

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து 6-வது மலர் கண்காட்சியை அண்மையில் நடத்தியது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் மலர் கண்காட்சி என்பதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

மூன்று நாட்கள் நடைபெற்ற கண்காட்சியில் பெரியவர்கள், சிறியவர்கள் என மொத்தம் 65 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மலர் கண்காட்சியைப் பார்வையிட்டனர். 2 லட்சத்திற்கும் மேலான மலர்களைக் கொண்டு 13 விதமான வடிவங்கள் இடம்பெற்றன. இந்நிலையில், நடந்து முடிந்த மலர் கண்காட்சியில் செலவினங்கள் குறித்த விவரங்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இருந்து எந்தவொரு விவரமும் முறையாகத் தெரிவிக்கப்படவில்லை என்றும் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பாகத் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமியிடம் கேள்வி எழுப்பினோம். அவரது பதில், ‘முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. கண்காட்சியில் அமைக்கப்பட்ட ஸ்டால் கட்டண வசூல், டிக்கெட் கட்டண வசூல் போன்ற எதையும் தவறாகப் பயன்படுத்தவில்லை.இந்த கண்காட்சியின் மூலம் கிடைத்த வருவாயை வேளாண்மை பல்கலைக்கழக தோட்டக்கலை பூங்காவை மேம்படுத்தப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.வெளிப்படையாகவே செயல்படுகிறோம். எங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை மறுக்கிறோம்’ என்றார்.