செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கவர்னரிடம் அதிமுகவினர் மனு.

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கவர்னர் ரவியிடம் அ.தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது. அக்கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் ஜெயகுமார் விஜயபாஸ்கர் பெஞ்சமின் ஆகியோர் நேற்று மாலை கவர்னர் ரவியை சந்தித்து மனு அளித்தனர்.பின் சி.வி.சண்முகம் அளித்த பேட்டி:அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு 24 மணி நேரம் கடந்த பின்னும் அவர் அமைச்சராக தொடர்வது சட்டத்திற்கு புறம்பானது. இது தொடர்ந்தால் அரசு மீது மக்களுக்கு அவ நம்பிக்கையை ஏற்படும்.

அவர் கைது செய்யப்பட்டதும் அவரை பதவியில் இருந்து முதல்வர் நீக்கி இருக்க வேண்டும்.அதற்கு பதிலாக முதல்வரும் அமைச்சர்களும் கூட்டணி கட்சியினரும் அவர் ஏதோ நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிதந்த தியாகி போல் சித்தரிக்கின்றனர்; அவர் மீது அனுதாபம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்து கைதாகி உள்ளார். அவருக்காக முதல்வர் ஓடோடி செல்கிறார். தன் சகோதரி கனிமொழி கைது செய்யப்பட்டபோது ஒரு முறை கூட ஸ்டாலின் டில்லி சென்று பார்த்தது இல்லை; இப்போது துடிக்கிறார்.எங்கள் ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி ஊழல் செய்தது தெரிந்ததும் அவரை அமைச்சர் பதவியில் இருந்து ஜெயலலிதா நீக்கினார்.

அப்போதே அவர் கைது செய்யப்பட வேண்டும் என ஸ்டாலின்வலியுறுத்தினார்.

அதை மறைத்து இன்று செந்தில்பாலாஜி உத்தமர் போல் நீலிக்கண்ணீர் வடிக்கிறார். அமலாக்கத் துறையும் வருமான வரித் துறையும் இரண்டு ஆண்டுகளில் செந்தில்பாலாஜி செய்த முறைகேடுகளை விசாரித்தால் ‘2ஜி’ ஊழலை விட மிகப்பெரிய ஊழல் வெளிப்படும்.கைதி செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் உடனடியாக நீக்க வேண்டும்.

இல்லையெனில் நீங்கள் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவர்னரிடம் மனு அளித்துள்ளோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பில் அடிப்படையில் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதனால் சீண்டி பார்க்காதேஎன முதல்வர் எச்சரிப்பது உச்ச நீதிமன்றத்தையா என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.