முகக்கவசம் இல்லாமல் உள்ளே நுழைய முடியாது..!

கோவை அரசு மருத்துவமனைக்குள் முகக்கவசம் அணியாமல் உள்ளே நுழையக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில் சென்னையில் மாநில சுகாதார பேரவையை தொடங்கி வைத்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஏப்ரல் 1ம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளளிலும் முககவசம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிக, நோயாளிகளுடன் வருபவர்கள், பணியாளர்கள், பாதுகாவலர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதன்படி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் அனைத்து நோயாளிகளும், பொதுமக்களும் முக கவசம் அணிந்திருந்தால் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். மருத்துவமனை பாதுகாவலர்கள் இதனைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தமிழகத்தில் பிற மாவட்டங்களை காட்டிலும் கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் சதவிகிதம் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.