கெட்டுப்போன 35ஆயிரம் லிட்டர் பால்; மூடி மறைத்த அதிகாரிகள்!

கோவையில் ஆவின் நிர்வாகத்தின் அலட்சியத்தால் 35 ஆயிரம் லிட்டர் பால் கெட்டுப்போனதாகவும், இதனை அதிகாரிகள் மூடி மறைப்பதாகவும் பால் முகவர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிடடுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்ட ஆவின் ஒன்றியத்தில் நாளொன்றுக்கு சுமார் 2.10லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் நிறைகொழுப்பு பாலான ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யப்படவிருந்த சுமார் 35ஆயிரம் லிட்டருக்கும் மேலான பால் கெட்டுப் போனதாகவும், அந்த கெட்டுப் போன பாலினை கழிவுநீர் குழாய் வழியாக அப்புறப்படுத்தியாகவும் வருகின்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிடக் கோரி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் பால் உற்பத்தியாளர்களின் பால் நிறுத்தப் போராட்டத்தால் ஈரோட்டில் இருந்து கோவை, பச்சாபாளையத்தில் உள்ள ஆவின் பால் பண்ணைக்கு வர வேண்டிய பாலில் சுமார் 35 ஆயிரம் லிட்டர் பால் வரத்து பாதிக்கப்பட்ட காரணத்தால் நிறைகொழுப்பு பாலான ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் உற்பத்திக்கான பால் கையிருப்பு இல்லாமல் போயிருக்கிறது.

இதனால் மகராஷ்டிராவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட பால் பவுடர் மற்றும் வெண்ணையை கலந்து நிறைகொழுப்பு பால் உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெற்ற போது பணியில் இருந்த பால் பண்ணை உதவி பொதுமேலாளர் மற்றும் தரக்கட்டுப்பாட்டு உதவி பொது மேலாளர் ஆகியோர் கவனக்குறைவாக செயல்பட்ட காரணத்தால் சுமார் 35 ஆயிரம் லிட்டர் பாலும் கெட்டுப் போனதாக கூறப்படுகிறது.

எந்த ஒரு ஆவின் பால் பண்ணையிலும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மேல் அதிகாரிகள் பணியில் வைத்திருக்காமல் குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வரும் போது கோவை மாவட்ட ஆவின் பால் பண்ணையில் மட்டும் சுமார் 30ஆண்டு காலமாக ஒரே இடத்தில் அதிகாரிகள் பணியில் இருந்து வருகிறார்கள்

இவர்கள் தங்களின் தவறை மூடி மறைக்கின்ற வகையில் கெட்டுப் போன சுமார் 35ஆயிரம் லிட்டர் பாலையும் கழிவுநீர் குழாய் வழியாக அப்புறப்படுத்தியாகவும் அதற்கு பொதுமேலாளர் உடந்தையாக இருந்ததாகவும் அங்கே பணியாற்றும் நேர்மையான பணியாளர்களும், விரிவாக்க அலுவலர்களும் புலம்பி வருகின்றனர்.

அத்துடன் ஒவ்வொரு கிராமம், கிராமமாக சென்று பால் உற்பத்தியாளர்களை சந்தித்து பால் கொள்முதலை அதிகப்படுத்த கடுமையாக பணியாற்றி வரும் எங்கள் மீது தவறான தகவல்களால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது கண்ணுக்கு தெரிந்தே சுமார் 35ஆயிரம் லிட்டர் பாலினை கெட்டுப் போகச் செய்து ஆவினுக்கு சுமார் 21லட்சம் ரூபாய் இழப்பை ஏற்படுத்தியவர்கள் ராஜமரியாதையோடு கோவை ஆவினில் உலா வருகின்றனர்.

மேலும் இதுவரை எந்த ஒரு மாவட்ட ஆவின் ஒன்றிய பொதுமேலாளர் அறையிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ரொக்கப் பணம் கைப்பற்றியதில்லை என்கிற நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கோவை மாவட்டம், பச்சாபாளையத்தில் உள்ள ஆவின் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்ட போது அலுவலக வளாகத்தில் இருந்த காரில் இருந்து சுமார் 8.5லட்சம் ரூபாய் ரொக்கமாக கைப்பற்றப்பட்டது.

ஆனால், ரொக்கப் பணத்திற்கு தொடர்புடையதாக கூறப்படும் பொதுமேலாளர் கைது செய்யப்படவோ, பணியிட மாற்றம் செய்யப்படவோ இல்லை.

அதுமட்டுமின்றி இதே ஒன்றியத்தில் கடந்த ஆண்டு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பால் பொருட்கள் கெட்டுப் போனதும், அதற்கு காரணமான அதிகாரிகள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது தான் “திராவிட மாடல்” கொள்கையா..? எனவும் கோவை ஒன்றிய ஊழியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் கோவை மாவட்ட ஆவினில் சுமார் 35ஆயிரம் லிட்டர் பால் கெட்டுப் போனதாக கூறப்படும் விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி அதன் உண்மை தன்மையை கண்டறிந்து ஆவினுக்கு இழப்பை ஏற்படுத்திய சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக நிரந்தர பணி நீக்கம் செய்து அதற்குரிய தொகையை அவர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்வதோடு, ஆவினுக்கு இழப்பை ஏற்படுத்தியமைக்கு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.