எஸ்.என்.எஸ் ராஜலட்சுமி கல்லூரியில் ஆண்டுவிழா

டாக்டர் எஸ்.என்.எஸ் ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 24 வது ஆண்டு விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினராக பெங்களூர் கேப்ஜெமினி டெக்னாலஜி (HR – Talent Acquisition) சீனியர் மேனேஜர் வெங்கடேஷ் குமார் கலந்துகொண்டார்.

எஸ்.என்.எஸ் கல்வி குழுமத்தின் தாளாளர் ராஜலட்சுமி குத்துவிளக்கு ஏற்றி விழாவினைத் தொடங்கி வைத்தார்.

கல்லூரியின் முதல்வர் அனிதா 2022 – 2023 ஆம் ஆண்டறிக்கையை வாசித்து கல்லூரியின் செயல்பாடுகளையும், மாணவர்களின் சாதனைகளையும் விளக்கி கூறினார்.

இவ்விழாவில் எஸ்.என்.எஸ் கல்விக்குழுமத்தின் தலைவர் சுப்பிரமணியன் தலைமையுரை ஆற்றினார். எஸ்.என்.எஸ் குழுமத்தின் கீழ் 1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எஸ்.என்.எஸ் ராஜலட்சுமி கல்லூரியில் 100 மாணவர்கள், 10 பேராசிரியர்கள் இருந்தனர். இப்போது இந்த எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது. எஸ்.என்.எஸ் குழுமத்தின் கீழ் 10 கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல் குமார் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளார். இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் ‘டிசைன் திங்கிங்’ என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வரும் முதல் நிறுவனம் எஸ்.என்.எஸ் தான் எனக் கூறினார்.

மாணவர்கள் மத்தியில் எஸ்.என்.எஸ் கல்வி நிறுவனங்களின் தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல் குமார் பேசியதாவது: அனைவரது வாழ்விலும் மிக முக்கியமானது மகிழ்ச்சி. ஊர் சுற்றுவது, தொலைபேசியில் நேரம் செலவிடுவது, சினிமா பாப்பது ஆகியவற்றை மகிழ்ச்சி என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதையும் தாண்டி, உங்களுக்குரிய ஈடுபாடு, உங்களுக்குள் இருக்கும் சக்தி என்ன என்பதைக் கண்டறிந்து அதை நோக்கி நீங்கள் சென்று, அதில் வெற்றியாளராக ஜொலிக்கும் போது, அப்போது கிடைக்கும் மகிழ்ச்சி நிலையானதாக இருப்பதோடு, மிகவும் திருப்திகரமானதாகவும் இருக்கும்.

எனவே, உங்கள் ஆற்றலை மிகவும் சுவாரசியமான, உங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவற்றின் மீது செலுத்துங்கள் எனக் கூறினார். தொடர்ந்து மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பேசினார்.

உங்களை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்!

சிறப்பு விருந்தினர் மேனேஜர் வெங்கடேஷ் குமார் பேசியதாவது: தனது பள்ளி மற்றும் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். படிப்பில் தான் மிகவும் பின் தங்கியிருந்ததாக கூறினார். கல்லூரி படிப்பு முடிந்த பின்பு, நிஜ வாழ்க்கைக்குள் வரும்போது தான் பட்ட கஷ்டங்களை எடுத்துக் கூறினார். வேலை தேடி பல இடங்களில் அலைந்ததாக குறிப்பிட்ட அவர், பணியில் படிப்படியாக உயர்ந்த நிலையை விளக்கினார். மேலும் ஒவ்வொரு நிலையிலும் போராட்டத்தை சந்தித்ததாகவும் பதிவிட்டார்.

மாணவர்களிடம் மேலும் அவர் கூறுகையில்: கல்லூரி வாழ்க்கை முடிந்து மாணவர்களாகிய நீங்கள் வெளிவரும் போது, உலகம் முழுவதும் வித்தியாசமாக இருக்கும். ஒரு செயலை செய்வதற்கு முன்பாகவே அதில் எதிர்மறை எண்ணத்தைக் கொண்டிருந்தால், அது தோல்வியை தான் தரும். எனவே எதிர்மறையாக சிந்திப்பதை விட்டுவிட்டு, நேர்மறை எண்ணத்துடன் இருங்கள். இலக்கை அடைய எவ்வளவு அவமானம், கஷ்டம் வந்தாலும் போராடி அதை அடைய முயற்சி செய்யுங்கள்.

முதலில் உங்களை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள் இருக்கும் பயத்தை நீக்குங்கள். ஒரு செயலை முயற்சிக்கும் போது அவமானபட்டாலும் பரவாயில்லை. அடுத்தமுறை அதை கற்றுக் கொள்ளுங்கள்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் பணிக்கு எந்த மாதிரியான திறன்கள் அவசியம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதில் உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள். பணியிடத்துக்கு அனுப்பும் ரேஸ்யூம் வித்தியாசமாக இருக்கவேண்டும். அதுதான் நிர்வாகத்தை ஈர்க்கும் என்றார்.