சாதி, மதத்தின் பெயரில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி – கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

மதத்தையும் ஜாதியையும் பயன்படுத்தி கலவரத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் ஆட்சியை வீழ்த்தி விடலாம் என சிலர் கனவு கண்டு கொண்டிருப்பதாக கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

சின்னியம்பாளையம் பகுதியில் கோவை மாவட்டம் திமுக சார்பில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மாற்றுக் கட்சியை சேர்ந்த பத்தாயிரம் பேர் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், முத்துசாமி உட்பட ஒருங்கிணைந்த கோவை மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது: திமுகவுக்கு ஒரு வரலாறு உள்ளது. இந்த கட்சியை பேரறிஞர் அண்ணா ஆட்சிப் பொறுப்பிற்காக துவங்கவில்லை. ஏழை எளிய மக்களுக்கு, விவசாய மக்களுக்கு, நெசவாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், ஒட்டுமொத்தமாக தமிழினத்திற்கும் தமிழ் சமுதாயத்திற்கும் இந்த இயக்கத்தை உருவாக்கி தந்தார்.

திடீர் திடீரென தோன்றக்கூடிய கட்சிகளை பார்க்கிறோம். முதல்வர் பதவிக்காக இன்று கட்சியைத் தொடங்கிய பல கட்சிகள் காணாமல் போயின. திமுகவைப் போல் வெற்றி பெற்ற கட்சியும் கிடையாது. தோல்வியுற்ற கட்சியும் கிடையாது. வெற்றி தோல்விகளை பற்றி கவலைப்படாமல் பாடுபடுகின்ற கட்சி திராவிட முன்னேற்ற கழகம்.

திராவிட மாடல் ஆட்சி சொன்னதை மட்டும் அல்லாமல் சொல்லாததையும் செய்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு மதத்தையும் ஜாதியையும் பயன்படுத்தி கலவரத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் ஆட்சியை வீழ்த்தி விடலாம் என சிலர் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு இன்று முதலே உழைக்க வேண்டும். 2024 மக்களவைத் தேர்தலில் திமுக மிகப் பெரிய வெற்றியை பெற வேண்டும்.

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நாம் மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்காக இனிவரும் காலங்களில் முழுமையாக ஈடுபட போகிறோம் என தெரிவித்தார்.