கோவை, நீலகிரி உட்பட 6 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு அபாயம் – இஸ்ரோ தகவல்

கோவை, நீலகிரி உட்பட தமிழகத்தின் ஆறு மாவட்டங்கள், நிலச்சரிவு ஏற்படக் கூடிய அபாயகரமான பகுதி என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ எச்சரித்துள்ளது.

இஸ்ரோவின் கீழ் இயங்கும், தேசிய தொலை உணர்வு மையம், நாட்டில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் நிறைந்த பகுதிகள் குறித்து ஆய்வு நடத்தியது. இதில், 147 மாவட்டங்கள் நிலச்சரிவு அபாயம் நிறைந்த பகுதி என தெரிய வந்துள்ளது. இதில், நம் நாட்டில் உள்ள 147 மாவட்டங்கள் நிலச்சரிவு அபாயம் நிறைந்த பகுதி என கண்டறியப்பட்டுள்ளது.

உத்தரகண்ட்டில் உள்ள ருத்ரபிரயாக், தெஹ்ரி ஆகிய மாவட்டங்கள் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இந்த பட்டியலில், உத்தரகண்டின் 13 மாவட்டங்கள், நிலச்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் நிறைந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் நிலச்சரிவுக்கு உள்ளான ஜோஷிமத் நகரத்தின் சமோலி மாவட்டம், 19 வது இடத்தை பிடித்துள்ளது. நிலச்சரிவு அபாயம் மிகுந்த மாவட்டங்களின் பட்டியலில், தமிழகத்தின் கோவை மாவட்டம், 36 வது இடத்திலும், திண்டுக்கல் மாவட்டம், 41வது இடத்திலும், கன்னியாகுமரி, 43வது இடத்திலும், தேனி மாவட்டம், 59 வது இடத்திலும், திருநெல்வேலி 72வது இடத்திலும், நீலகிரி 85வது இடத்திலும் உள்ளன.