ரொனால்டோவுக்கு வலை வீசும் சவுதி அரேபியா!

ரொனால்டோ தனது அணிக்கு விளையாட 225 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1,839 கோடி ரூபாய் வழங்க சவுதி அரேபிய அணி முன்வந்துள்ளது.

உலகின் நட்சத்திர வீரரான கிரிஸ்டியானோ ரொனால்டோ இங்கிலாந்தின் பிரபல கால்பந்து கிளப் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து சமீபத்தில் விலகினார்.

பல ஆண்டுகள் கழித்து தன்னை வளர்த்தெடுத்த தாய் கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு மீண்டும் 2021ஆம் ஆண்டில் கம்பேக் கொடுத்தார்.

இந்த வருகை இங்கிலாந்து கிளப் தொடர் ரசிகர்களுக்கும், குறிப்பாக மான்செஸ்டர் யுனைடெட் அணி ரசிகர்களுக்கும் மிகுந்த உற்சாகமிக்க செய்தியாக அமைந்தது. ஆனால் ஓராண்டிலேயே கிளப் நிர்வாகம், மேலாளர் ஆகியோருடன் ரொனால்டோவுக்கு மோதல் வெடித்தது.

பின்னர் ஊடக பேட்டி ஒன்றில் ரொனால்டோ, “அணியின் உரிமையாளர்கள் அணியின் வளர்ச்சி குறித்தோ, விளையாட்டை குறித்தோ கவலைப்படவில்லை. அணிக்கு கிடைத்த புகழை வைத்து பணம் சம்பாதிப்பதே உரிமையாளர்களின் குறிக்கோளாக உள்ளது” என பகீரங்கமாக குற்றஞ்சாட்டினார்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து விலகியதாக அவர் அறிவித்தார்.

தற்போது உலகக் கோப்பை போட்டி நடைபெறுவதால் போர்ச்சுகல் அணிக்கு விளையாடி வரும் ரொனால்டோ இதன் பின்னர் எந்த கிளப்பில் சேரவுள்ளார் என்ற ஆர்வம் தலைதூக்கியுள்ளது.

இந்நிலையில், சவுதி அரேபியாவைச் சேர்ந்த AL NASSR என்ற கிளப் ரொனால்டோவுக்கு வலை வீசியுள்ளது.

இந்த ஆஃபரை ரொனால்டோ ஏற்பாரா என்று ஆர்வம் கிளம்பியுள்ளது. காரணம் முன்னணி கால்பந்து வீரர்கள் அனைவரும் ஐரோப்பிய கிளப்களில் தான் விளையாட விரும்புவார்கள். ஓய்வு காலத்தில் தான் ஆசியா, அமெரிக்க கிளப்புகளில் விளையாடுவார்கள் என்ற நிலையில் சவுதி கிளப்பின் ஆஃபருக்கு ரொனால்டோ என்ன பதில் சொல்லப் போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.