தமிழகத்துக்கு கிடைத்த நல் முத்து பி.டி.ஆர். -சரஸ்வதி கண்ணையன் புகழாரம்

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் ‘யங் இந்தியா’ சார்பாக ‘டிஜி கோயம்புத்தூர் 2.0’ (Digi Coimbatore 2.0) என்ற நிகழ்ச்சி நடைபெற்று.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தனராக கலந்துகொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார். முன்னதாக, சிறப்பு விருந்தினரை வரவேற்றுப் பேசிய, இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன்,‘உலக அதிசயங்கள் எல்லாம் கல்லால் ஆனவை. அமைச்சர் பி.டி.ஆர்.ரின் சாதனைகள் எல்லாம் சொல்லால் ஆனவை. தமிழகத்துக்குக் கிடைத்த அருமையான நல் முத்து இவர். வீரபாண்டிய கட்டபொம்மன் தன் வீரத்தைப் போரில் சொன்னான், விவசாய பெருமக்கள் தங்கள் பெருமைகளை வியர்வையில் சொன்னார்கள், அரிச்சந்திரன் தனது நேர்மையைச் சொல்லில் சொன்னான், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனது பெருமையைச் செயலில் சொல்கிறார்.

நான்கு தலைமுறைகளாக வெளிநாட்டில் கல்வி பயின்று, அங்கு உள்ள பொருளாதாரம், வர்த்தகம் ஆகியவற்றை நன்கு அறிந்தவர். சிங்கப்பூர் போன்ற பல மேலை நாட்டில் பணியில் இருந்திருக்கிறார். அரசியல் குடும்பப் பின்னணியில் வந்ததன் காரணமாக வெளிநாட்டு வாழ்க்கையைத் துறந்து அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இவரின் சாதனைகளைப் பட்டியலிட்டால் ஓர் நாள் போதாது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அமைச்சரை அழைத்து வந்தமைக்கு யங் இந்தியா நிறுவனத்துக்கு நன்றிகள்’எனக் கூறி வரவேற்றார்.

குடிமையியல் கற்பது கட்டாயம்
-பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், ‘40 ஆண்டுகளுக்கு முன்பு தற்போது இருக்கின்ற ஃபேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் இல்லாத காலம். அப்போது, பொழுதைக் கழிக்க வாரத்திற்கு 2 புத்தகங்கள் படிப்பேன். அந்த பழக்கம் கல்வியில் பல்வேறு பட்ட மேற்படிப்புகளைத் தொடர உந்துகோளாக அமைந்தது. வேதியியல், நியூக்ளியர் சயின்ஸ் போன்ற எந்த துறைசார்ந்த படிப்புகளைப் பயின்றாலும் குடிமையியல் கற்பது கட்டாயம். இதுவே, சமூகம் சார்ந்த அடிப்படை புரிதலை வளர்க்கும். நான்கு வகையான தொழில்நுட்ப புரட்சிகளை எனது வாழ்நாளில் கடந்து வந்துள்ளேன். தற்போது, வேகமாக வளர்ந்து வரும் துறையாக செயற்கை நுண்ணறிவு இருக்கின்றது. அனைத்து துறைகளிலும் இதன் தாக்கம் உள்ளது. இதனால், வேலை வாய்ப்புகள் பெருகும். கோவை போன்ற நகரங்களில் தகவல் தொழில்நுட்பங்கள் சார்ந்த ஐடி தொழில்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன’என்று பேசியதோடு தொழில்நுட்பங்கள் தொடர்பான மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரி, குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.