விதிகளை கடைபிடித்தால் விபத்தை தடுக்கலாம்!

உலக தலைக்காய விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கோவை ராயல் கேர் மருத்துவமனை சார்பாக இருசக்கரவாகன ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்.

கோவையில் முதன் முறையாக சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி முதலுதவி அளிக்கும் விதமாக ராயல் கேர் மருத்துவமனை சார்பாக இருசக்கரவாகன ஆம்புலனஸ சேவை துவங்கப்பட்டது.
தமிழகத்தில் சாலை விபத்துக்களால் அதிக உயிரிழப்புகள் ஏற்படும் நகரமாக கோவை மாறி வரும் நிலையில், இதனை தடுக்கும் விதமாக ராயல் கேர் மருத்துவமனை இரு சக்கர வாகன ஆம்புலன்ஸை அறிமுகம் செய்துள்ளனர்.

இந்த வசதியை மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் நெடுஞ்சாலைகள் (சாலைப் பாதுகாப்பு) கோட்டப் பொறியாளர் மனுநீதி, இந்திய மருத்துவ சங்க கோவை கிளை செயலாளர் டாக்டர் ஸ்ரீராமலிங்கம் மற்றும் செங்கப்பள்ளி-நீலம்பூர்,நெடுஞ்சாலை எண் 544 பிரிவு திட்டத் தலைவர் ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் உலக தலைக்காய தினத்தை முன்னிட்டு ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாக்கத்தான் நடைபெற்றது. கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் துவங்கிய தலைக்காய விழிப்புணர்வு நடைபயணம் பிரதானசாலை வழியாக நஞ்சப்பா சாலை ராயல்கேர் மருத்துவமனை சென்றடைந்தது.
நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன், ‘வாகனங்களை ஓட்டும் பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை சரியாக கடைபிடித்தாலே பெரும்பான்மையான விபத்துகளை தவிர்க்கலாம்.

மேலும், பெரும்பாலான தலைக்காயங்கள் சாலை விபத்துக்களாலேயே ஏற்படுகிறது. தற்போது துவங்கப்பட்டுள்ள இரு சசக்கர வாகன ஆம்புலன்ஸ், அதிக போக்குவரத்து நெரிசல் மற்றும் குறுகலான பாதைகள் வழியாக விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைவாக செல்லமுடியும். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் பத்து நிமிடங்களுக்குள் அளிக்கப்படும் முதலுதவி சிகிச்சையான பிளாட்டினம் ஹவர் சேவை மிகமுக்கியமானது‘ என்றார்.

மேலும், அவசர மற்றும் விபத்துகால சேவைகளுக்கு 91434 91434, 0422-2227444 எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார். மேலும், இந்த வாகனங்கள் நீலாம்பூர் ராயல்கேர் மருத்துவமனையிலும் நஞ்சப்பாரோட்டிலுள்ள சிட்டியூனிட்டிலும் நிறுத்தி வைக்கப்படும்.என்பது குறிப்பிடதக்கது.