இந்தியாவின் முதன்மை சைபர் குற்றங்கள்!

இந்தியாவில் அடர்ந்த மக்கள் தொகை இருப்பதால் தொழில் வளம், வணிக வளம், அறிவியல், நுட்பவியல் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்து பொருளாதாரத்தின் அடிப்படையில் நம் நாடு முன்னேறி வருகிறது. அதிலும், தகவல் தொழில்நுட்பமானது அசுர வேகத்தில் வளர்ந்து சென்று கொண்டிருக்கிறது. இது நன்மையே என்றாலும், இதனால் பாதிப்புகளும் ஏற்படவே செய்கிறது.

இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சைபர் குற்றங்கள் அதிகரிது உள்ளது. குறிப்பாக, கொரோனா பெருந் தொற்றுக்குப் பிறகு நிகழும் இணைய மோசடிகளால் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். சொல்லப்போனால், கொரோனா காலத்தில் முழு ஊரடங்கின் போது பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தினர். இதன் பிறகே, ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ நம் நாட்டில் மிகவும் பிரபலமானது. தங்களுக்கு ஏற்ற சூழலில் இருந்து பணிபுரிவது, நிறுவனத்தில் கண்காணிப்பு வளையத்தில் இல்லா வேலை உள்ளிட்ட காரணங்களால் பலருக்கும் இத்தகைய சூழல் பிடித்துப் போனது. குறிப்பாக, பெண்களுக்கு ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’, ‘பார்ட் டைம் வொர்க்’ சவுகரியமாக இருந்தது, இருந்தும் வருகிறது.

‘ஒரு நன்மை இருந்தால் அதில் தீங்கும் இருக்கும்’ என்பது போல் மக்களின் தேவை மற்றும் மனநிலையைப் புரிந்து கொண்ட சில மோசடி கும்பல்கள், வீட்டில் இருந்து வேலை செய்வது, பகுதி நேர வேலை போன்ற வாய்ப்புகளை உருவாக்கித் தருவதாகக் கூறி ஆயிரக்கணக்கான மக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். 2023 ஆம் ஆண்டில் மட்டும் இவ்வாறான சைபர் குற்றங்கள் அதிக எண்ணிக்கையில் பதிவாகி உள்ளது.

மோசடி செய்பவர்கள் முக்கியமாக டிஜிட்டல் விளம்பரங்கள், ஆன்லைன் மெசஞ்சர் சேனல்கள் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்களை அணுகுகிறார்கள். மேலும், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டும் மோசடி கும்பல்களின் இரண்டாவது பெரிய கருவி ‘அப்ளிகேஷன்கள்’ ஆகும். உடனடி கடன் பெரும் வகையில் சில மொபைல் அப்ளிகேஷன்களை உருவாக்கி அதனை மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிட்டு பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பாதிக்கப்பட்ட சிலர் உயிரை மாய்த்துக் கொண்ட செய்திகளை ஆங்காங்கே படிக்க நேர்கிறது. இந்த செயலிகள் பெரும்பாலும் சீனா, கம்போடியா, மியான்மர் போன்ற நாடுகளில் இருந்து செயல்படுகின்றன. இந்திய அரசு இது குறித்து அந்நாட்டு அரசாங்கத்திடம் தொடர்ந்து அறிக்கை அளித்து வருகிறது.

இதனைத் தடுக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C) சந்தேகத்திற்கிடமான 595 செயலிகளை முடக்கியுள்ளது. அதோடு, உடனடி கடன் பெரும் செயலிகளான ரிசர்வ் வங்கி அங்கீகரித்த 395 செயலிகள் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கம், காவல் துறையில் இருந்து நடந்து வரும் இணைய வழி குற்றங்கள் குறித்தான விழிப்புணர்வு காணொளிகள், செய்திகள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. என்றாலும் மக்களும் மோசடி கும்பல்களிடம் சிக்கித் தவிக்கத்தான் செய்கின்றனர்; குற்றங்கள் கட்டுக்குள் வரவில்லை.