திருவள்ளுவர் சிலை நாளை திறப்பு!

குறிச்சி குளக்கரையில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட 20 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளதை முன்னிட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. மாநகராட்சியில் உள்ள 7 குளங்கள் சீரமைக்கப்பட்டு அழகுபடுத்தபட்டு, குளக்கரைகளில் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்தபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை- பொள்ளாச்சி சாலையில் உள்ள குறிச்சி குளம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழ் எழுத்துகளை கொண்டு சுமார் 2.5 டன் எடையில் 20 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த திருவள்ளுவர் சிலையை நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

இதனையடுத்து திருவள்ளூவர் சிலை மற்றும் அந்த குளத்தினை சுற்றியுள்ள பகுதிகளில் பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர்.