புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள்

போதையில் வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கோவை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆங்கில புத்தாண்டு கேளிக்கை விருந்துகளுக்கு ஏற்பாடு செய்யும் ஹோட்டல்கள், விடுதிகளுக்கு எச்சரிக்கை – மாநகர காவல் துறை ஆணையாளர் கேளிக்கை விருந்துகளுக்கு ஏற்பாடு செய்யும் ஹோட்டல்கள், நடத்தும் நிகழ்ச்சிகள் தொடர்பாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படா வண்ணம் இருக்கத் வேண்டும் என்று மாநகர காவல்துறை சார்பாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதி மீறல்களை தடுப்பதற்காக போக்குவரத்து மற்றும் உள்ளூர் காவல் துறையினர் இணைந்து நகரம் முழுவதும் வாகனத் தணிக்கையில் ஈடுபட உள்ளார்கள். மது அருந்தி விட்டு பிரச்சனையை ஏற்படுத்துபவர்கள், போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபவர்கள், குறிப்பாக மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், வாகனப் பந்தயத்தில் (Racing) ஈடுபடுபவர்கள், இருசக்கர வாகனங்களில் சைலன்சர்களை நீக்கிவிட்டு அதிக சத்தத்துடனும், ஒலிப்பான்களை ஒலிக்கச் செய்துகொண்டும் வாகனம் ஓட்டுபவர்கள், பொது மக்கள் நடமாட்டத்திற்கும், வாகனப் போக்குவரத்திற்கும் இடையூறு செய்யும் விதமாக அதிவேகமாகவும் அஜக்கிரதையாகவும் வாகனம் ஓட்டுபவர்கள் ஆகியோர் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதற்காகவும் 45 முக்கியமான சாலை சந்திப்புகள் மற்றும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு காவல் குழுக்கள் மூலம் வாகனத் தணிக்கை செய்யப்பட உள்ளன. அனைத்து மேம்பாலங்களிலும் 31 தேதி இரவு புத்தாண்டு தினத்தன்று போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

வாகன விபத்து உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்களில் பாதிக்கப்பட்டோரை மீட்க நகரின் முக்கிய இடங்களில் உள்ள மேம்பாலங்கள் அடைக்கப்படும், மேலும் மது அருந்திவிட்டு வாகனம் இயக்குபவர்களை Breath Analyser மூலம் கண்டறிந்து தக்க சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் குற்றச் செயல்களை தடுக்கும் விதமாக, பழங் குற்றவாளிகள் குறிப்பாக செயின் பறிப்பில் ஈடுபடுபவர்கள், பிக்பாக்கெட்டில் ஈடுபடுபவர்கள் மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் ஆகியோர்களின் செயல்பாடுகள் தீவிரமாக காவல்துறையால் கண்காணிக்கப்பட்டு தக்க குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்களின் அமைதியை பேணுவதற்காக காவல் துறையினரின் எண்ணிக்கை பலப்படுத்தப்பட்டு உள்ளது என இவ்வாறு தெரிவித்தார்.