சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் 29 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கே.பி.ஆர் இந்தியா நிர்வாக இயக்குனர் கீதா ராமமூா்த்தி கலந்து கொண்டார்.

T.P.ராமச்சந்திரன் நிர்வாக அறங்காவலர் மற்றும் செயலர், சந்தியா ராமச்சந்திரன் இணைச் செயலர், நித்யா ராமச்சந்திரன் துணை இணைச்செயலர், சங்கரா கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் மற்றும் இணைச் செயலர் கல்யாணராமன் மற்றும் அறங்காவலர் பட்டாபிராமன், கல்லூரி முதல்வர் முனைவர் வி.ராதிகா, துணை முதல்வர் எட்வர்ட் பெர்னார்ட் மற்றும் பல்வேறு துறைத் தலைவர்கள் இசைக் குழுவின் இசையுடன் விழா நடைபெறும் இடத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

பட்டமளிப்பு விழா இறைவணக்கத்துடன் துவங்கியது. கல்லூரி முதல்வர் முனைவர் வி.ராதிகா அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றி, ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். டி.பி.ராமச்சந்திரன் அறங்காவலர் மற்றும் செயலர், பட்டமளிப்பு விழாவைத் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர் கே.பி.ஆர் இந்தியா நிர்வாக இயக்குனர் கீதா ராமமூா்த்தி அவர்கள் உரையாற்றுகையில், அவர் தனது உரையில், வளர்ச்சி மனப்பான்மையைக் கடைப்பிடிப்பதன் மூலம், விமர்சன சிந்தனையைப் பயன்படுத்தி தொடர்ச்சியான கற்றலைத் தழுவி, அவர்களின் தகவல் தொடர்புத் திறனை மேம்படுத்தலாம் என்றும், டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துவதன் மூலம், மாணவர்கள் தங்கள் திறனை வெளிக்கொணரலாம் மற்றும் அவர்களின் வாழ்க்கையில் சிறந்த உயரங்களை அடைய முடியும் என்றார்.

தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கும் பொறுப்பான குடிமக்களாக இருப்பதற்கும் அவர்களின் பங்களிப்பை வலியுறுத்தினார். அடுத்த தலைமுறையினரின் அறிவை வளர்ப்பதற்காக கல்வித் திறன்கள், விளையாட்டு நெறிமுறைகள் மற்றும் மதிப்பு அடிப்படையிலான கற்றல் ஆகியவற்றை வழங்குவதற்காக நிறுவனம் மற்றும் அதன் ஆசிரிய உறுப்பினர்களை அவர் பாராட்டினார். “கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு” என்ற ஒளவையின் சிந்தனையை முன்வைத்து உரையை முடித்தார்.

அனைத்துத் துறையின் தலைவர்களும் அந்தந்தத் துறைகளின் பட்டதாரிகளை அழைத்தனர். சிறப்பு விருந்தினர் பட்டங்களை வழங்க முதுகலை வணிக நிர்வாகம், முதுகலை கணினி அறிவியல், முதுகலை வணிகவியல், இளங்கலை கணினி அறிவியல், இளங்கலை வணிகவியல், இளங்கலை வணிகவியல் சி.ஏ., இளங்கலை தகவல் தொழில்நுட்பம், கணினி பயன்பாடுகள், உணவுவிடுதி மேலாண்மைத்துறை, வணிக நிர்வாகம் ஆகிய பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 310 மாணவ, மாணவியர் பட்டம் பெற்றனர். பட்டதாரிகள் பட்டங்களை பெற்ற பின் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர் பட்டமளிப்பு விழா நாட்டுப்பண்ணுடன் நிறைவடைந்தது.