வி.எல்.பி. கல்லூரியில் தேசிய விவசாயிகள் தின விழா

வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்  சமூக விரிவாக்கச் சேவை மையம் மற்றும் நம்மாழ்வார் மன்றம் இணைந்து குறிச்சித் தொழில் பேட்டை, அரிமா சங்கத்துடன் (மாவட்டம்-324சி) “தேசிய விவசாயிகள் தின” விழா கொண்டாடப்பட்டது.

இதில் கோவையைச் சார்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகளை அழைத்து வந்து சிறப்புச் செய்தனர்.  நிகழ்விற்கு கல்லூரி அறங்காவலர் சூரியகுமார் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பழனிச்சாமி, துணைத் தலைவர் பெரியசாமி,  பள்ளபாளையம் பஞ்சாயத்துத் தலைவர் செல்வராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

அவர்கள் பேசுகையில்,  கோவை சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கக்கூடிய மேற்குத் தொடர்ச்சி மலையின் மூலிகை நிறைந்த வனங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும், சிறுவாணியின் தரம், இயற்கையை காப்பது, குடிநீர்த் திட்டம், பாசனத் திட்டம், குளங்களை உருவாக்குவது, பிளாஸ்டிக் ஒழிப்பு, மண் வளம் மேம்படுத்தல் போன்ற விழிப்புணர்வுகளை மாணவர்களுக்கு வழங்கியதோடு, மாணவர்கள் விவசாயம் செய்ய முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இயற்கை விவசாயி இளம் பட்டதாரி விஜயன் கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். நிகழ்வின் ஒரு பகுதியாக நம்மாழ்வார் மன்றம், உரங்களற்ற காய்கறிகளை சந்தைப்படுத்தி இயற்கை விவசாயத்திற்கு விழிப்புணர்வூட்டியது.

கல்லூரி முதல்வர் சதீஷ்குமார் தனது உரையில் நாட்டின் முதுகெலும்பாய்த் திகழ்வது விவசாயமே என்றும், விவசாயிகளைப் போற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் இந்நிகழ்வில்  கலந்து கொண்ட விவசாயிகள் அனைவரையும் கல்லூரி நிர்வாகம் பெருமைப்படுத்தியது. தொடர்ந்து, இதில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்  இடம் பெற்றன.