சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியில் நிறுவனர் நாள் விழா

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியின் நிறுவனர் நாள் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்சிக்கு, கோயம்புத்தூர் ‘சகோதரன்’ அமைப்பின் தலைவர், ‘இயகாகோ’ என்.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மாலையில் நடைபெற்ற நிறுவனர் நாள் விழாவில், பள்ளியில் 25 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றிவரும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கும், கடந்த கல்வியாண்டில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கும், பொதுத் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற வைத்த ஆசிரியர்களுக்கும், அபுதாபியின் நடைபெற்ற பன்னாட்டு ரோபோடிக் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கும், ஜெர்மனி எர்ஃபர்டிலுள்ள கொனிஜென் லூயி ஜிம்னாஷியம் பள்ளிக்குக் கலாச்சாரப் பரிமாற்றம் நிகழ்விற்காக மாணவ மாணவியரை அழைத்துச் சென்று வந்த ஆசிரியர்களுக்கும் சிறப்பு விருந்தினர் சான்றிதழ்களை வழங்கிக் கௌரவித்தார். மேலும், பள்ளியில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவியருக்குக் ‘கலா கார்த்திகேயன்’ விருதினையும், அஞ்சல்தலை சேகரிப்பிற்காக ‘ஸ்ரீசேதுராமன்’ விருதினையும் மாணவ மாணவியருக்கு சிறப்பு விருந்தினர் வழங்கினார்.

பள்ளியின் ஆண்டு மலரினை பள்ளியின் நிர்வாக அறங்காவலர் வெளியிட சிறப்பு விருந்தினர் ‘இயகாகோ’ சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார். சிறப்பு விருந்தினர் ‘இயகாகோ’ என்.சுப்பிரமணியன் தனது வாழ்த்துரையில், ‘‘தேசியத்தையும், தெய்வீகத்தையும் அறவழியைக் காட்டுகின்ற கல்வியையும் வழங்கி வருகின்ற அற்புதப் பணியினை சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி செய்து வருகின்றது. அதற்காக பள்ளியின் நிர்வாகத்திற்குப் பாராட்டுகள்.

இந்தியாவிற்கு இணையான நாடு வேறு இல்லை. இங்கிருக்கின்ற மொழிகளில் தோன்றிய கவிதைகள் மற்றும் இலக்கியங்களுக்கு இணையாக வேறு எந்த நாட்டு மொழியிலும் இல்லை. வாழ்க்கையில் அறம் சொல்லக்கூடிய அற்புதமான ஆன்மிக சித்தாந்தவாதிகளையும் சித்தர்களையும் கொண்டிருந்த நாடு இந்தியாவை விட வேறு எங்கும் கிடையாது. இந்த மண்ணில் பிறந்ததற்காகப் பெருமைப்பட வேண்டும். இங்குக் கிடைக்கின்ற கல்விக்காகப் பெருமைப்பட வேண்டும். அறம் மிக்க நாடு என்றால் இந்திய நாடு மட்டும் தான். வேறு எந்த நாட்டிலும் இங்குள்ளது போன்ற அறநூல்கள் கிடையாது.

பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி வரவேற்றார். பள்ளியின் முன்னாள் மாணவர்களான திருமதி.வி.மதுமிதா மற்றும் டாக்டர். ஏ.எல்.விவேக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர். பள்ளியின் நிர்வாக அறங்காவலர் ராமசாமி தலைமையுரையாற்றினார். பள்ளிச் செயலர் சிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசன் வாழ்த்துரை வழங்கினார். கல்வி ஆலோசகர் நல்லாசிரியர் டாக்டர் வெ.கணேசன் நன்றி கூறினார்.