நாட்டு நலப்பணித்திட்ட சேவைக்குப் பாராட்டு

இன்றைய உலகம் தொழில்நுட்பத்தில் முன்னேறுவதற்கு இணையாக, நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் பயன்படும் வகையில் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று சமீபகாலமாகப் பலர் குரல் கொடுத்து வரும் சூழலில், தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு சமூக நலப் பணிகளில் ஈடுபட்ட ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகளைத் தொண்டாமுத்தூர் பகுதிக் காவல்துறை, தீயணைப்புத்துறையினர் மற்றும் ரோட்டரி கிளப் ஆகியோர் இணைந்து வாழ்த்திக் கல்லூரி முதல்வர் முனைவர் சித்ரா அவர்களிடம் பாராட்டுச் சான்றிதழை வழங்கினர்.

வலிமைமிக்க இளம்பருவத்தில் நல்ல செயல்களைச் செய்ய வழிகாட்டுவதால் பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்க முடியும் என்பதற்குச் சான்றாக, அப்பகுதியில் சாலைப் பாதுகாப்பு, பொதுமக்களுக்கான மருத்துவ முகாம்கள், தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் மூலமாக மாணவிகள் ஏற்பாடு செய்திருந்தனர். சமூக அக்கறையோடு பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் மாணவிகள் செய்த நலப்பணிகளை முன்னதாகப் பலரும் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.