புது வெள்ளை மழை இங்கு பொழிகிறது…! கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள் ? 

இந்தியாவைப் பொருத்தவரை டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்கள் குளிர்காலச் சுற்றுலாவுக்கு ஏற்றவை. வட இந்தியாவின் பல பகுதிகளிலும் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கிவிட்டது. காஷ்மீர், இமாச்சல பிரதேசம் போன்ற பகுதிகளில் புது வெள்ளை மழை பொழிய தொடங்கியுள்ளது.

குளிர்காலத்தில் வட இந்தியாவில் பார்க்கவேண்டிய முக்கிய இடங்கள் என்னென்ன?

ஸ்ரீநகர் : பனி என்றாலே நிச்சயம் நம் நினைவுக்கு வருவது காஷ்மீர்தான். ‘அன்பே வா ’வில் தொடங்கி ‘லியோ’வரை திரையில் காஷ்மீரை பார்க்கும்போதே நமக்குள் குளிரத் தொடங்கிவிடும். பனிப்பொழிவை விரும்புபவர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று காஷ்மீரின் ஸ்ரீநகர். கிழக்கின் வெனிஸ் என்று அழைக்கப்படும் ஸ்ரீநகரில் சாஷ்மே ஷாஹி தோட்டம், நிகின் ஏரி, தால் ஏரி, துலித் தோட்டம் என சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன.

குல்மார்க் : பனிப்பொழிவை அனுபவிக்க விரும்புபவர்கள் செல்ல வேண்டிய மற்றொரு இடம் ஸ்ரீநகரில் இருந்து 60கி.மீ. தொலைவில் உள்ள குல்மார்க். உறைந்த ஏரிகள், பனி முடிய நிலப்பரப்பு, இமயமலையின் பிரமிக்கவைக்கும் காட்சிகள் இடமாக குல்மார்க் உள்ளது. இங்குள்ள குல்மார்க் கொண்டோலாவில் இயக்கப்படும் கேபிள் கார் உலகின் உயரமான கேபிள் கார் சேவைகளில் ஒன்று. இங்கு பனிச்சறுக்கில் ஈடுபடுவதே ஒரு அலாதியான அனுபவமாக இருக்கும்.

மணாலி : உயரமான பனி படர்ந்த மலைகள், பள்ளத்தாக்குகள் என சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற சொர்க்கபுரியாக திகழும் மற்றொரு இடம் இமாச்சல பிரதேசத்தில் உள்ள மணாலி. சாகசப் பிரியராக இருந்தால் பனிச்சறுக்கு, மலையேற்றம், படகு ஓட்டம், பாராகிளைடிங், ஏர் பலூன் ரைட் என ஏராளமான சாகசங்களை நீங்கள் மணாலியை அனுபவிக்க முடியும்.

சிம்லா : மலைகளின் அரசியான சிம்லா இல்லாமல் குளிர்கால சுற்றுலாவை நாம் திட்டமிட முடியாது. பிரிட்டிஷ் ஆட்சியின்போது கோடைக்கால தலைநகராக இருந்த சிம்லா, வட இந்தியாவில் முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது.

தீர்த்தன் பள்ளத்தாக்கு : இரைச்சலான நகரவாழ்க்கையில் இருந்து அமைதியான சூழலை விரும்புபவர்களுக்கு ஏற்ற இடம் இமாச்சலில் உள்ள தீர்த்தன் பள்ளத்தாக்கு. குல்லு மாவட்டத்தில் உள்ள தீர்த்தன் பள்ளத்தாக்கு, அதன் அற்புதமான இயற்கை அழகு, அமைதியான சூழல், அடர்ந்த காடுகள், வளமான பல்லுயிர் போன்றவற்றுக்கு பெயர் பெற்றது.

ஆலி : உத்தர்காண்டில் உள்ள ஆலி, மசூரி, நைனித்தால் ஆகிய சுற்றுலா தலங்களில் ஜனவரி மாதத்தில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் அப்போது செல்வது சரியானதாக இருக்கும். பனிப்பொழிவைத் தாண்டி உத்தராகண்டின் மசூரி, ராஜஸ்தானின் ஜெய்லர்மெர் போன்ற பகுதிகளும் குளிர்கால சுற்றுலாவுக்கு ஏற்ற இடங்களாக திகழ்கின்றன.

கஜ்ஜியார் : குட்டி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் கஜ்ஜியார், புகழ்பெற்ற சுற்றுலா தலமான டல்ஹௌஸியில் இருந்து 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. டல்ஹௌஸிக்கு சென்று பழமையான தேவாலயங்கள், இயற்கை காட்சிகளையும் ரசித்துவிட்டு வரலாம்.

கவனிக்க வேண்டியவை என்ன?

மருந்துகள்: ஒருசிலருக்கு குளிர் ஏற்றுக்கொள்ளாமல் போகக்கூடும். எனவே, தேவையான மருந்துகளை கையிருப்பில் வைத்துக்கொள்வது அவசியம்.

மலைப்பகுதியில் மேலே செல்லச்செல்ல ஆக்சிஜன் குறைய வாய்ப்பு இருக்கிறது. எனவே, ஆஸ்துமா போன்ற பாதிப்பு இருப்பவர்கள் அதற்கு ஏற்ப பயணத்தை திட்டமிட வேண்டும்.

குளிரை தாங்கக்கூடிய உடைகள், பூட்ஸ் போன்றவற்றை உடன் வைத்துக்கொள்ள வேண்டும். சுற்றுலா செல்லும் இடத்தில் வாங்கிக்கொள்ளலாம் என்று அலட்சியமாக இருக்கக் கூடாது.

சுற்றுலா சேவை நிறுவனங்கள் மூலம் இல்லாமல் நீங்களாகவே செல்கிறீர்கள் என்றால், சுற்றுலா செல்லும் இடத்தைப் பற்றி கூடுதலாக தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம்.