33 ஆண்டுகளுக்குப் பிறகு; மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய ரஜினி

ரஜினி நடிக்கும் 170 ஆவது படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியுள்ள நிலையில், அமிதாப் பச்சன் உடனான புகைப்படத்தை தனது எக்ஸ் (ட்வீட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ஞனவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கிறார். இதில், இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். லைகா நிறுவன தயாரிப்பில் உருவாகும் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

பெயரிடப்படாத இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காட்சிகள்  திருவனந்தபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. இந்நிலையில் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் தொடர்பான காட்சிகள் மும்பையில் எடுக்கப்படுகின்றன. இதற்காக மும்பை சென்றுள்ள ரஜினி வரும் 28 ஆம் தேதி வரை படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

இந்நிலையில் தனது எக்ஸ்  (ட்வீட்டர்) பக்கத்தில் நடிகர் அமிதாப் பச்சன் உடனான புகைப்படத்தை பகிர்ந்துள்ள ரஜினிகாந்த் “லைகா தயாரிப்பில், ஞானவேல் இயக்கும் என்னுடைய 170 ஆவது படத்தில் மீண்டும் 33 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆளுமை நிறைந்த என்னுடைய வழிகாட்டி பச்சனுடன் பணிபுரிகிறேன், மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

ரஜினியின் இந்த பதிவை தற்போது அவரின் ரசிகர்கள் இணையதளத்தில் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.